தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனத்த மழை பெய்து வருகிறது. அதிலும் சென்னையில் தொடர் மழை காரணமாக பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இது அடுத்த 36 மணி நேரத்தில் காற்றமுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 11ம் தேதி காலை தமிழக கரையை நெருங்ககூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், அதி கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ள இடங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையும், மிக கன மழை பெய்வதற்கு சாத்தியக்கூறுகள் உள்ள இடங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ எச்சரிக்கையும் விடப்படும்.
அந்த வகையில் 10-ந் தேதி, 11-ந் தேதியில் பல்வேறு மாவட்டங்களில் கன முதல் அதி கன மழை பெய்யக்கூடும் என்பதால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
‘ரெட்’ மற்றும் ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஓரிரு இடங்களில் 20 செ.மீ. முதல் 25 செ.மீ. வரையில் மழை பதிவாக வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.