700 ஆண்டுகள் பழமையான ”பேய் மரம்” - வியப்பூட்டும் தகவல்
தமிழகத்தின் ராஜபாளையத்தில் 700 ஆண்டுகள் பழமையான பொந்தன்புளி மரம் இன்றுவரை கம்பீரமாக காட்சியளிக்கிறது.
ஆயிரம் ஆண்டுகள் வரை வாழக்கூடிய பொந்தன்புளி மரங்கள் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, அரேபியா பகுதிகளை பூர்வீகமாக கொண்டவை.
தமிழகத்துக்கு வந்த வரலாறு
வெளிநாடுகளில் இருந்து வந்த வணிகர்களால் பாண்டிய நாட்டு பகுதிகளுக்கு இம்மரங்கள் வந்துள்ளன.
அரேபியா தீபகற்பத்தில் இருந்து குதிரைகளை பாண்டிய மன்னர்கள் இறக்குமதி செய்துள்ளனர்.
அப்போது அரேபியா நாட்டு குதிரைகளுக்கு தீவனமாக பொந்தன்புளி மரத்தின் இலைகள், கனிகள், காய்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதற்காக இம்மரத்தின் விதைகள் பாலைவன பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு பாண்டிய நாட்டின் பல பகுதிகளில் நடப்பட்டன.
மரத்தின் அமைப்பு
பொந்தம்புளி மரத்தில் எட்டு இனங்கள் உள்ளன. அதில் ஆறு இனங்கள் மடகாஸ்கருக்கும், ஒன்று ஆப்ரிக்காவிற்கும், மட்டொன்று அரேபியா தீபகற்பத்திற்கும் சொந்தமானது.
‘டீ கப்’ வடிவில் கூட ஒரு வகை உள்ளது. 25 மீட்டர் வரையிலும் உயரமாக வளரக்கூடிய, இதன் அடிமரத்தின் சுற்றளவு சுமார் 14 மீட்டர் வரை இருக்கும்.
மரத்தின் சிறப்பு
பிரமாண்ட தோற்றம், பொந்து போன்ற அமைப்பு, இலைகளின் புளிப்பு சுவை ஆகியவற்றால் இந்த மரத்துக்கு தமிழர்கள் பொந்தன் புளி மரம் என பெயர் சூட்டி உள்ளனர்.
பேய் மரம்
ராஜபாளையத்தின் Chinmaya Vidyalaya வளாகத்துக்குள் அமைந்துள்ள இந்த மரத்துக்கு பேய் மரம் என பெயர் சூட்டியுள்ளனர் அப்பகுதி மக்கள்.
காரணம் ஒவ்வொரு ஆண்டும் இதன் இலைகள் எல்லாம் உதிர்ந்த பின்னர், அச்சு அசலாக எலும்புகூடு போன்றே காட்சியளிக்குமாம்.
இதுதவிர முன்னோர்களின் ஆவி இம்மரத்தில் வசிப்பதாகவும் அப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.