ஹீரோவான தமிழன்! கல்யாணத்திற்கு சேர்த்த பணத்தில் கிராமத்திற்கு சாலை அமைத்து புதிய புரட்சி
திருமணத்திற்கு வைத்திருந்த பணத்தில் பொதுமக்களுக்கு சாலையிட்டு மக்கள் மத்தியில் தமிழர் ஒருவர் ஹீரோவாக மாறியிருக்கிறார்.
இந்தியாவில் ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கு இன்னும் முறையான சாலை வசதியே இல்லை.
அரசியல்வாதிகளும், அதிகாரிகளும மக்கள் மீது அக்கறையின்றி இருக்கும் இந்த காலக்கட்டத்தில் சாமானியர் ஒருவர் தன் திருமணத் தேவைக்கு வைத்திருந்த பணத்தில் பொதுமக்களுக்கு சாலையிட்டு மக்கள் மத்தியில் ஹீரோவாக மாறியிருக்கிறார்.

திருமணத்திற்கு சேர்த்த பணத்தில் கிராமத்திற்கு சாலை
விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள நல்லாவூரைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் பி.சந்திரசேகரன் (31) தனது திருமணத்திற்காகச் சேமித்து வைத்திருந்த ₹10.5 லட்சத்தை கான்கிரீட் சாலை அமைப்பதற்காக செலவு செய்துள்ளார்.
சென்னையில் உள்ள HCL டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் மூத்த தொழில்நுட்பத் தலைவரான சந்திரசேகரன், செப்டம்பர் 1ஆம் தேதி நடக்கவிருந்த தனது திருமணத்திற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாகச் பணம் சேமித்து வைத்துள்ளார்.
இருப்பினும், சாலையின் பரிதாப நிலை குறித்து நல்லாவூர் மக்கள் படும் துயரங்களைக் கண்டு நெகிழ்ந்தார்.

அந்த பணத்தை கிராமத்தில் கான்கிரீட் சாலை அமைக்க பயன்படுத்த முடிவு செய்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் வானூரில் உள்ள தொகுதி மேம்பாட்டு அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளை அணுகி, குடியிருப்பு பகுதிகளில் குடிமை கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ், சாலை அமைக்க அனுமதி கோரி மனு அளித்தார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சந்திரசேகரனின் நண்பர், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 100% பங்களிப்புடன் இத்திட்டத்தை மேற்கொள்வதற்கான நிர்வாக ஒப்புதலைப் பெற உதவியுள்ளார்.
சாதித்து காட்டிய இளைஞர்

290 மீட்டர் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி மார்ச் மாதம் துவங்கி ஒரு மாதத்தில் நிறைவடைந்தது. இப்போது சந்திரசேகரன் அந்த பகுதி மக்களுக்கு ஹீரோவாக மாறியிருக்கிறார்.
இந்த தகவல் இணையத்தில் வைரலாகி குறித்த இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.