பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும்: அதிரடியாக அளிக்கப்பட்ட புகார்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் சீசன் 5-ஐ நிறுத்த வேண்டும் என மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. மக்களின் அமோக வரவேற்பாலும் ஆதரவாலும் இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக 4 சீசன்களை கடந்து தற்போது 5வது சீசனையும் நடத்தவுள்ளது.
அடுத்தடுத்து புரொமோவை வெளியிட்டு ரசிகர்களின் ஆர்வத்தினை அதிகரித்து வரும் பிரபல ரிவிக்கு எதிராக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பாஜக நகர தலைவர் மோடி கண்ணன் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகாரில், “பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி இந்து கலாச்சாரத்துக்கு எதிராகவும் நிகழ்ச்சி பங்கேற்பாளர்களை அதிக மனஉளைச்சலுக்கு உள்ளாக்குவதாகவும் பங்கேற்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததாகவும் உள்ளது.
கொரோனா மூன்றாவது அலை தீவிரமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையிலும், கொரோனா காரணமாக கோயில்களை திறக்கவும் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி தேவையற்றது.
இந்த நிகழ்ச்சியின் தயாரிப்புக்காக 500க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடுகின்றனர். எனவே, கொரோனா காலத்தில் கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.