எந்த நாட்டிற்கும் அச்சுறுத்தலை தரமாட்டோம்... தாலிபான்கள் வெளியிட்ட அறிவிப்பு!
தாலிபான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய நிலையில், 20 வருட போர் நிறைவு பெற்றுள்ளதாகவும், மக்கள் மற்றும் ஆப்கானின் சொத்துக்கள் ஏதும் கொள்ளையடிக்கப்படாது எனவும் தாலிபான் தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர்.
இதையடுத்து, முதல் முறையாக செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருக்கின்றனர். இந்த சந்திப்பில் எதிர்காலத்தில் அவர்களுடைய செயல்பாடு, திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்திருக்கின்றனர்.
அதில், தாலிபான் பேசுகையில், ஆப்கானிஸ்தானில் சண்டை முடிந்தது. காபூல் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும். போரின் போது மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் ஒரு விபத்து தான், உள்நோக்கத்துடன் கூடியது கிடையாது.
தாலீபான்கள் அனைவரையும் மன்னித்து விட்டது, முன்னாள் ராணுவ வீரர்கள், வெளிநாட்டு படைகளுக்காக வேலை செய்தவர்கள் என யார் மீதும் எங்களுக்கு பழிவாங்கும் எண்ணம் கிடையாது. அவர்களின் வீடுகளை சோதனையிட மாட்டோம்.
மேலும், ஆப்கானிஸ்தானில் இருந்து எந்த நாட்டிற்கும் அச்சுறுத்தல் இருக்காது என்பதை உலக நாடுகளுக்கு உறுதி அளிக்கிறோம். இஸ்லாமிய சட்டத்தின் கட்டமைப்புக்கு உட்பட்டு பெண்களின் உரிமைகளுக்கு முழு மதிப்பளிப்போம், ஊடக சுதந்திரமும் அளிக்கப்படும்.
தாலிபான்கள் சமரசத்துக்கு தயாராக இருப்பதாகவும், பழிவாங்கும் எண்ணம் இல்லை என்றும் அவர் கூறியது அனைவருக்கும் வியப்பை அளித்தது.