கூகுள் தமிழன் சுந்தர் பிச்சையின் வீட்டை வாங்கிய நடிகர் யார் தெரியுமா?
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பிறந்து வளர்ந்த சென்னை வீட்டை தமிழ் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான சி.மணிகண்டன் வாங்கியுள்ளார்.
ரகுநாத பிச்சை, லக்ஷமி தம்பதியினருக்கு பிறந்த சுந்தர் பிச்சை வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான்.
சென்னை அசோக் நகர் பகுதியில் அவர் வளர்ந்த வீடு தற்போது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதை வாங்கியவர் தமிழ் நடிகரும், தயாரிப்பாளருமான சி.மணிகண்டன் ஆவார்.
சொத்து வாங்குவதற்காக தேடிக்கொண்டிருந்த போது, சுந்தர் பிச்சை வீடு விற்பனைக்கு வருவதை அறிந்து அதை வாங்கியதாக தெரிவித்துள்ளார் சி.மணிகண்டன்.
இது தான் இவரது முதல் சொத்துமாகும், இது தன் வாழ்வின் பெருமைக்குரிய சாதனை என கூறியுள்ள மணிகண்டன், பழைய வீடு என்பதால் அந்த வீட்டை இடித்துவிட்டு, நிலமாகவே தனக்கு விற்றதாகவும்,
கோயில் போன்ற இந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வாடகைக்கு விட மனமில்லை, அதனால் தனது மனைவி குழந்தைகளுடன் குடும்பமாக வாழு ஒரு வில்லாவை அங்கு ஆசையாக கட்டவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சுந்தர் பிச்சை அவர்களின் பெற்றோரின் பணிவு மற்றும் அடக்கமான அணுகுமுறை தன்னை பிரமிக்கவைத்ததாகவும் கூறியுள்ளார்.
முதன்முறையாக அவர்களை சென்னை அடையாரில் நேரில் சந்தித்து சொத்து வாங்குவது குறித்து பேசியதாகவும், அவர்கள் மிகவும் இயல்பாக பேசி நடந்துகொண்டதாகவும், அவர்கள் ஒரு அருமையாக காபி போட்டு கொடுத்ததாகவும்,
முதல் சந்திப்பிலேயே, தன்னைப் பற்றி விசாரித்து, அவர்களுக்கு தன்னை மிகவும் பிடித்ததாக கூறியதாகவும், நல்ல நேரம் பார்த்து தனக்கு வீட்டின் ஆவணங்களை கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பதிவு அலுவலகத்தில் சுந்தர் பிச்சையின் தந்தை மணிக்கணக்கில் காத்திருந்ததாகவும், தனது மகனின் பெயரையும் அந்தஸ்தையும் பயன்படுத்தவில்லை என்றும், ஆவணங்களை தன்னிடம் ஒப்படைப்பதற்கு முன்பு தேவையான அனைத்து வரிகளையும் செலுத்தியதாகவும் மணிகண்டன் கூறினார்.
சுந்தர் பிச்சை தந்தையின் முதல் சொத்து இது என்பதால் ஆவணங்களை ஒப்படைக்கும் போது அவர் சில நிமிடங்கள் உடைந்துவிட்டார் என்றும் மணிகண்டன் கூறினார்.