இரண்டு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை... கணவரால் ஏற்பட்ட துயரம்
கன்னியாகுமரி அருகே குடும்ப தகராறில் 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து விட்டு, தானும் சாப்பிட்ட இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
அருப்புக்கோட்டை அடுத்த வில்லுபத்திரி பகுதியை சேர்ந்தவர் பாண்டி(33). கட்டிட தொழிலாளி. இவருக்கும், செங்கோட்டையை சேர்ந்த திருமலைசெல்விக்கும் (26) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு திவ்யா (5), காவ்யா (4) என்ற 2 மகள்கள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு பாண்டி குடும்பத்துடன், குமரி மாவட்டம் தென்தாமரைகுளம் வடக்கு பகுதியில் சென்று வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
கட்டிட வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்த பாண்டி, கடந்த சில வாரங்களாக வேலைக்கு செல்லாமலும், குடும்ப செலவிற்கு பணம் கொடுக்காமல் இருந்ததால் திருமலைச்செல்வி தவித்துள்ளார்.
இதுகுறித்து பலமுறை கூறியும் கண்டுகொள்ளாத பாண்டி சம்பவத்தன்றும் வேலைக்கு செல்லாததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்பு பாண்டி வெளியே சென்ற தருணத்தில் தாய் மற்றும் தனது இரண்டு மகள்களுக்கும் அரளி விதையை அரைத்து கொடுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சற்று நேரத்தில் வீட்டிற்கு வந்த பாண்டி, மனைவி மற்றும் குழந்தைகள் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மூவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
இதில், குழந்தைகள் உயிர் பிழைத்தனர். ஆனால், திருமலைச்செல்விக்கு மயக்கம் தெளியாததால், அகஸ்தீஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
தகவலறிந்த பொலிசார், திருமலைசெல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.