கந்துவட்டி கொடுமையால் வீடியோவை வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட நபர்!
கந்துவட்டி கொடுமையால் நபர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவ வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மதுரை மகபூப்பாளையம் அன்சாரிநகர் பகுதியை சேர்ந்தவர் முஹம்மது அலி (37). இவருக்கு திருமணமாகி 8 வயது மற்றும் 3 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர்.
இதையடுத்து, இவர் செல்வக்குமார் என்பவரின் கந்துவட்டி தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக கூறி காவல்துறையினருக்கு வேண்டுகோள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும், இந்த வீடியோ வெளியிட்டுக்கு பிறகு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். முஹம்மது அலி தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது, “வழக்கறிஞர் செல்வகுமார் என்பவரிடம் 5 லட்சம் கடன் வாங்கிய நிலையில் 6 லட்சம் ரூபாய் திருப்பி செலுத்தியும் கூடுதலாக பணம் கேட்டு தொல்லை செய்து வருகின்றனர்.
என்னால் இதை சுத்தமாக சமாளிக்க முடியவில்லை, வீட்டிற்கு வந்து மனைவி குழந்தைகளை அவதூறாக பேசுகிறார்கள் மிகவும் மோசமாக நடந்து கொள்கின்றனர். என்னுடைய இந்த சாவிற்கு வழக்கறிஞர் செல்வக்குமார், ஜெயேந்திர சிங், காமாட்சி மற்றும் மாரிமுத்து ஆகியோர் தான் முக்கிய காரணம். பிள்ளைகளை நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று தந்தையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், என்னோடு முடியட்டும் இந்த கொடுமை வேறு யாரும் இது போன்ற கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்யும் நிலை வரக்கூடாது, மாநகர காவல்துறை ஆணையர் அவர்களே நடவடிக்கை எடுங்கள் என்றும் கண்ணீருடன் பதிவிட்டிருந்தார்.
மக்களின் குறைகளை தீர்த்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின் அய்யா அவர்களே என்னுடைய குடும்பத்தின் குறைகளையும் தீர்த்து வையுங்கள், என்னுடைய மனைவி குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்குங்கள் முதல்வரே, என கண்ணீர் மல்க எட்டு நிமிட வீடியோ வெளியிட்டு இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.