உடல் எடை திடீரென அதிகரிக்கின்றதா? உங்களுக்கே தெரியாத காரணம் இது தான்
உடல் பருமன் என்பது நம்முடைய வாழ்வியல் தவறுகள் காரணமாக ஏற்படக் கூடிய நோய் ஆகும்.
தற்போது தனது உடல் எடை அதிகரிப்பதால் பலரும் கவலையில் காணப்படுகின்றனர். இதற்கு காரணம் அவர்களுக்கே தெரியாமல் கூட இருக்கலாம். அதில் நமக்கு தெரியாத சில காரணங்களை தற்போது பார்க்கலாம்.
உடல் எடை திடீரென்று அதிகரிக்க மன அழுத்தம் மிக முக்கிய காரணியாக உள்ளது. இன்றைய வாழ்க்கை சூழலில் எல்லோருக்குமே மன அழுத்தம் உள்ளது.
குடும்பம், வேலை, கல்வி, காதல் என்று ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி மன அழுத்தத்துடன் வாழ்பவர்கள் அதிகம். மன அழுத்தம் நம்மை அறியாமல் அதிக உணவு சாப்பிடத் தூண்டுவதால், நாமும் அதிகமாக உட்கொண்டு உடல் எடை அதிகரித்து விடுகின்றது.
சில வகையான மாத்திரை, மருந்துகள் எடுப்பது உடல் எடையை அதிகரிக்கச் செய்கின்றன. உடல் எடை அதிகரிப்பதைத் தவிர்க்க மாத்திரை, மருந்துகளை எடுப்பதற்கு முன்பு உடல் எடை தொடர்பாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
ஜங்க் ஃபுட் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். அதில் உள்ள ரசாயனங்கள், கார்போஹைட்ரேட், கொழுப்பு என எல்லாம் சேர்ந்து உடல் எடையை அதிகரிக்கச் செய்துவிடும். ஜங்க் ஃபுட் எடுக்கும் நாட்களில் கூடுதலாக உடற்பயிற்சி செய்து அதிகப்படியான கலோரிகளை எரிப்பது நல்லது.
அதிகம் சர்க்கரை சேர்க்கப்பட்ட ஜூஸ், மில்க் ஷேக், கார்பனேட் குளிர் பானங்கள் அருந்துவது திடீரென்று உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். சுவையாக இருந்தாலும் அதிகம் சர்க்கரை சேர்வதால் இவை உடல் நலத்துக்கு கேடாக மாறிவிடும்.
சிலருக்கு எப்போதும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இதை ஃபுட் அடிக்ஷன் என்று சொல்வார்கள். இந்த எண்ணம் வந்தவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும்.
ஹார்மோன் சமச்சீரின்மை ஏற்படும்போது உடல் எடை அதிகரிக்கும். குறிப்பாக பெண்களுக்கு தைராய்டு பிரச்னை காரணமாக உடல் பருமன் ஏற்படுகிறது. மெனோபாஸ் காலத்தில் ஹார்மோன் அளவுகளில் மாற்றம் ஏற்படுகிறது.
இதனால் உடலின் மெட்டபாலிசம் பாதிக்கப்பட்டுக் கொழுப்பு அதிக அளவில் சேகரிக்கப்படுகிறது. இதன் காரணமாக உடல் எடை அதிகரிக்கிறது. தினசரி உடற்பயிற்சி, யோகா போன்றவற்றைச் செய்வதன் மூலம் கட்டுப்படுத்த முடியும்.
