சாதனை படைத்த டோலோ 650.. வெற்றிக்கான ரகசியம் என்ன? கடந்து வந்த பாதை!
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வந்த நிலையில், டோலோ 650 மாத்திரையானது அதிகளவில் விற்பனை ஆகி இருந்தது.
இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 350 கோடி டோலோ மாத்திரைகள் விற்பனை ஆனதாக வெளியான செய்தியே டோலோ மீம்ஸ்களுக்கு பின்னே உள்ள முக்கியக் காரணமாக அமைகிறது.
கொரோனா காலக்கட்டத்தில் அதிகம் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரையாக காய்ச்சல், வலி மாத்திரையாகவும் டோலோ- 650 திகழ்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மொத்தமாக 350 கோடிக்கும் மேல் டோலோ-650 மாத்திரைகள் விற்பனை ஆகியுள்ளன.
1.5 செ,மீ அளவுள்ள இந்த கொண்ட இந்த மாத்திரைகளை அடுக்கினால், எவரெஸ்ட் மலை சிகரத்தை விட 6,000 மடங்கு பெரிதாக இருக்கும் என ஒரு கணக்கு சொல்லப்படுகிறது.
வெற்றியின் ரகசியம் என்ன?
பெங்களூருவை தலைமையகமாகக் கொண்ட மைக்ரோ லேப்ஸ் (Micro Labs) இந்நிறுவனம் 1973-ல் சென்னையில் தொடங்கப்பட்டது.
இந்நிறுவனத்தின் (Dilip Surana) சி.இ.ஓ திலிப் சுரானாவின் தந்தை ஜி.சி.சுரானா நிறுவனத்தை துவக்கினார். அதன்பின்னர், படிப்படியாக வளர்ந்த இந்த நிறுவனம் இந்தியாவின் முன்னணி மருந்தாக விநியோக நிறுவனங்களில் ஒன்றாக உருவாகியிருக்கிறது.
இருதய சிகிச்சை, கண் சிகிச்சை, நீரிழிவு சிகிச்சை, வலி நிவாரணி, ஆண்டிபயாடிக்ஸ், நரம்பியல் உள்ளிட்ட பிரிவுகளில் மருந்துகளை இந்நிறுவனம் உற்பத்தி செய்கிறது. மாத்திரைகள், திரவங்கள், சிரஞ்சிகள், ஆயின்மெண்ட் உள்ளிட்ட வகைகளில் மருந்துகளை விற்பனை செய்து வருகிறது.

சி.இ.ஓ திலிப் சுரானா, 1983-ம் ஆண்டு பொறுப்பிற்கு வந்தார். இவர் சகோதரர் ஆனந்த் சர்மாவுடன் இணைந்து நிர்வாகத்தை கவனித்து வருகிறார்.
இந்நிறுவனம் இந்தியாவில் 14 நவீன உற்பத்தி ஆலைகள் மற்றும் மூன்று ஆய்வு மையங்களைக் கொண்டுள்ளது. 1993-ம் ஆண்டு முதல் ஏற்றுமதி மற்றும் சர்வதேச சந்தையிலும் கவனம் செலுத்தி வருகிறது.
உண்மையை சொல்லப்போனால் டோலோ-650 பொதுவான பாராசிட்டாமல் மாத்திரை வகையச்சேர்ந்தது. கால்பால், குரோசின் உள்ளிட்ட வேறு பல பிராண்ட் மாத்திரைகளும் இந்தப் பிரிவில் உள்ளன.
அடுத்தாக மற்ற காய்ச்சல் மாத்திரைகளை விட டோலோ- 650 மாத்திரை அதிகம் விற்பனை ஆவது ஏன் எனும் கேள்விக்கு பதிலாக பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
அவை, பொதுவாக 500 மில்லி கிராம் பாராசிட்டாமல் கொண்டுள்ள நிலையில் இதில் 650 மிகிராம் கொண்டிருப்பதால், இது சற்று சக்தி வாய்ந்தது என மக்கள் நினைப்பது ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது.
மேலும், இந்நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமே கோவிட் சூழலில், தேவைப்பட்ட இடங்களில் எல்லாம் மாத்திரை கிடைக்க, விற்பனை பிரதிநிதிகள் தீவிரமாக செயல்பட்டுள்ளனர்.