ஆட்டோ ஓட்டும் சுப்ரமணியபுரம் திரைப்பட நடிகர்.., வைரலாகும் புகைப்படம்
கடந்த 2008ஆம் ஆண்டு சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தில் டும்கான் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் மாரிமுத்து. படத்தில் மைக் செட் அமைக்கும் தொழிலாளியாக அவர் நடித்திருந்தார்.
மதுரையைச் சேர்ந்த மாரிமுத்து, சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தார்.

மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவர், லைட் மற்றும் மைக் செட் அமைக்கும் வேலை செய்து வந்துள்ளார்.
அப்போது அவரை பார்த்த சசிகுமார், சுப்ரமணியபுரம் படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததாக கூறப்படுகிறது.
பல கோணங்களில் புகைப்படம் எடுத்த படக்குழு, பின்னர் அவரை தொடர்புகொண்டு படத்தில் நடிக்க அழைத்துள்ளது.
மாரிமுத்துவின் கதாபாத்திரம் படத்தின் முக்கிய திருப்பமாக அமைந்தாலும், அதன் பிறகு அவருக்கு எதிர்பார்த்த அளவில் சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

வாழ்க்கையை நடத்த ரேடியோ கடையில் வேலை பார்த்ததுடன், பின்னர் ஆட்டோ ஓட்டியும் வருமானம் ஈட்டியுள்ளார்.
ஒரு கட்டத்தில் ஆட்டோ பழுதடைந்ததால் அதை சரிசெய்ய கூட பணம் இல்லாமல் சிரமப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
தற்போது ஆட்டோவை மீண்டும் சரிசெய்து ஓட்டும் அவரது வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
சமீபத்திய தோற்றத்தில் அவர் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருப்பதும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.