ரோட்டு கடை பாணியில் அசத்தல் தக்காளி சட்னி... இப்படி ஒரு முறை செய்து பாருங்க
பொதுவாக பல்வேறு வகையான உணவுகளை பெரிய ரெஸ்டாரன்ட்களில் சாப்பிட்டிருந்தாலும் சில உணவுகளை ரோட்டுகளில் சாப்பிடுவதன் இன்பமே அலாதியானது.
அந்தவகையில் ரோட்டுகடை தக்காளி சட்னியை விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அப்படியும் விரும்பாதவர்கள் இருந்தால், அதனை சுவைத்ததில்லை என்றே அர்த்தம்.
அப்படி அனைவரும் விரும்பும் ரோட்டு கடை தக்காளி சட்னியை வீட்டிலேயே மிகவும் எளிமையான படிமுறைகளில் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்
தேவையான பொருட்கள்
தக்காளி - 500 கிராம்
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தே.கரண்டி
கடுகு - 1 தே.கரண்டி
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 2-3
கறிவேப்பிலை - 2 கொத்து
மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
மிளகாய் தூள் - 2 தே.கரண்டி
மல்லித் தூள் - 3 தே.கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் வெட்டாமல் தக்காளியை அப்படியே சேரத்து தோல் உரியும் வரை கொதிக்கவிட வேண்டும்.
பின்னர் தக்காளிகளை வெளியே எடுத்து, தோல் நீக்கிவிட்டு , தக்காளி குளிர்ந்த பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்தது ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சேர்த்து சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் கீறி வைத்துள்ள பச்சை மிளகாயையும் சேர்த்து, அதோடு கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயத்தின் நிறம் மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அரைத்த தக்காளியை சேர்த்து, அத்துடன் 1 1/2 டம்ளர் அளவுக்கு தண்ணீர் ஊற்றி நன்றாக கிளறி விட வேண்டும்.
பின்னர் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட்டு மசாலா வாசனை போகும் வரையில் கொதிக்கவிட வேண்டும்.
இறுதியாக கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், அவ்வளவு தான் அசத்தல் சுவையில், ரோட்டுக்கடை தக்காளி தண்ணி சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |