வினோதமாக தோன்றிய தலை... சோதனை செய்த அதிகாரிகளுக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி
திரைப்பட பாணியில் முடிக்குள் தங்கத்தை கடத்தியுள்ள நபரை சோதனை செய்து அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து தற்போது அதிகமாக தங்கம் கடத்திவருவது அதிகமாக நடந்து வருகின்றது.
இந்நிலையில் துபாயிலிருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை சோதனை செய்தபோது இரண்டு இளைஞர்களின் சிகை அலங்காரம் வித்தியாசமாக இருந்ததால் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
அவர்களை தடுத்து விசாரித்த போது, தலையில் அணிந்திருந்த விக்குகளில் 698 கிராம் எடை கொண்ட தங்கம் மறைத்து வைக்கப்பட்டதைக் கண்டுபிடித்துள்ளனர். இவர்கள் இருவரும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த மஹ்ரூப் அக்பரலி (39) மற்றும் சென்னையைச் சேர்ந்த ஹஸ்ஸன் ரஃபியுதீன் (26) என்பது தெரியவந்துள்ளது.
மேலும் அதே விமானத்தில் வந்த திருச்சியை சேர்ந்த பாலு கணேசன் (42) என்பவரை அதிகாரிகள் சோதனை செய்தபோது அவரது உடலில் தங்கப் பசை அடங்கிய 3 பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றில் இருந்து அதிகாரிகள் 622 கிராம் தங்கை பிரித்தெடுத்தனர்.
தற்போது அனைவரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. மேலும் திரைப்பட பாணியில் தங்கம் கடத்திவந்த சம்பவம் சுங்கத்துறை அதிகாரிகளையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.