இலங்கை தமிழர்களின் பெயரில் நடக்கும் மோசடி: சிக்கித்தவிக்கும் இளம்பெண்கள்! எச்சரிக்கை பதிவு
இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி உலகத்தினை அதள பாதாளத்திற்கு ஒருபுறம் கொண்டு செல்லும் நிலையில், மற்றொரு புறம் படித்தவர்களை முட்டாளாகவும் மாற்றி வருகின்றது.
ஆம் இன்று நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூகவலைத்தளங்களில் மூலமாக கிடைக்கும் நண்பர்கள் நம்மை படுகுழிக்குள் தள்ளிவிடுவார்கள் என்று நினைக்காத இளைஞர்கள், இளம்பெண்கள் பல மோசடிகளுக்கும் தாக்குதலுக்கும் ஆளாகி ஏமாந்து நிற்கும் அவலம் ஏற்பட்டு வருகின்றது.
அதாவது வெளிநாடில் இருக்கும் நபர் சமூக வலைத்தளங்களில் மூலமாக அறிமுகமாகி, அழகை வர்ணித்தும், நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசியும், விட்டில் பூச்சிகளைப் போன்று இன்றைய இளசுகளுக்கு மிகவும் சிக்கவைத்து விடுகின்றனர்.
இதற்கெல்லாம் காரணம் என்னவெனில் இன்று நமது கைக்குள் இருக்கும் உலகம் என்றால் அது மொபைல் போன் தான். அதனை வைத்துக்கொண்டு சமூகவலைத்தளங்களில் தனது அன்றாட செயல்களில் ஆரம்பித்து அவ்வப்போது தங்களின் இருப்பிடம் வரை அனைத்தையும் பகிர்ந்து, நமது தனிப்பட்ட விபரங்களை உலகமே பார்க்கும் அளவிற்கு வைப்பதே.
இன்று முகநூல் பக்கத்தினை அதிகமாக பயன்படுத்தும் நபர்கள் யார் ப்ரெண்ட் ரெக்யூஸ்ட் கொடுத்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு ஆரம்பத்தில் நட்பாக பழகி பின்பு ஏமாற்றத்தினை அதிகமாக சந்தித்து வருவது மட்டுமின்றி, சில டேட்டிங் செயலியில் பணம் கட்டி யார் தங்களது வலையில் சிக்குவார்கள் என்று பல கும்பல்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு சிக்குபவர்களை நட்பாக பழகி ஒரு வருடத்தில் அவர்களின் ஒட்டுமொத்த தகவல்களையும் தெரிந்து கொண்டு இறுதியில் தங்களது கைவரிசையை கச்சிதாக காட்டிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகின்றனர். இங்கு சில உண்மை சம்பவங்களைக் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
பெண்ணின் உண்மை கதை
திருச்சியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி பெண் ஒருவருக்கு சென்னையில் தகவல் தொழில்நுட்ப அலுவலகத்தில் வேலை கிடைத்துள்ளது. இப்பெண்ணின் தந்தை அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். இவரது தாய் கல்லூரி படிக்கும்போதே இறந்துள்ளார். இவருக்கு கல்லூரி படிப்பினை முடித்த ஒரு சகோதரரும் இருந்துள்ளார்.
இப்பெண் தனக்கு நடந்த மோசடியினை கூறுகையில், தான் கல்லூரி படிக்கையில் ராஜன் என்பவர் முகநூலில் அறிமுகமாகிய அவர் ஜெர்மனியில் வாழும் இலங்கை தமிழர் ஆவார். அடிக்கடி வீடியோ காலில் பேசியுள்ளார்.
இவரது தந்தை சிறுவயதிலேயே இலங்கையில் இறந்துவிட்டதாகவும், தனக்கு அம்மா மற்றும் அக்கா உள்ளதாக கூறியதோடு, சொந்தமாக தொழில் செய்து வருவதாகவும் வீட்டிற்கு ஒரே ஒரு பையன் என்றும் கூறி வந்துள்ளார்.
ராஜனின் பேச்சு குறித்த இளம்பெண்ணிற்கு ஆறுதலாக இருக்கவே, இவர்களின் நட்பு ஒரு கட்டத்திற்கு மேல் காதலாக மாறி, ராஜன் முதலில் காதலை கூறிய நிலையில், அவர்கள் வீட்டிலும் அனைவருக்கும் சம்மதம் என்று தெரிவித்தள்ளார்.
பெண்ணின் வீட்டில் சம்மதிக்காத தந்தையையும் ராஜன் பேசி சம்மதிக்க வைத்ததோடு, அடுத்த ஆண்டு தை மாதம் நிச்சயம் செய்துகொண்டு பின்பு ஒரு வாரத்தில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ராஜன் கூறியுள்ளார்.
பின்பு ராஜன் தங்க அட்டிகை ஒன்றையும், அதனுடன் கவர் ஒன்றினையும் குறித்த பெண்ணிற்கு பரிசாக அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார். இரண்டு வாரங்கள் கழித்து குறித்த பெண்ணிற்கு டெல்லி கஸ்டம்ஸ் கிளியரிங் ஏஜென்ட் பேசுவதாக பெண் ஒருவர் பேசியுள்ளார்.
தங்களுக்கு வந்த பார்சலில் நகையின் மதிப்பு குறைத்து காட்டப்பட்டுள்ளதாக அபராதம் 17 ஆயிரம் கட்டினால் தான் தங்களுக்கு வழங்க முடியும் என்று கூறிய நிலையில் இளம்பெண்ணும் தனது காதலன் அனுப்பிய முதல் பரிசு என்று அப்பணத்தினை கட்டியுள்ளார்.

பின்பு இரண்டு தினங்கள் கழித்து குறித்த பெண்ணிற்கு மறுபடியும் அப்பெண் போன் செய்துள்ளார். தங்களுக்கு வந்த பார்சலில் இருந்த கவரில் £3000 பணம் இருப்பதாகவும், இது சட்ட விரோதம் இதற்கு ரூ.75 ஆயிரம் 48 மணிநேரத்திற்குள் கட்டவேண்டும் என்று நிர்பந்தித்துள்ளார்.
உடனே காதலனுக்கு போன் செய்ததும், இப்போதைக்கு ரூ.25 ஆயிரம் அனுப்பிவிடு, மீதம் பார்சல் வந்ததும் அனுப்புகிறேன் என்று கூறி ஐடியா கொடுத்த நிலையில், பெண்ணும் தனது நகைகளை அடகுவைத்து 25 ஆயிரம் அனுப்பியுள்ளார்.
பின்பு எந்தவொரு தகவலும் தெரியவில்லை, குறித்த ராஜனையும் தொடர்பு கொள்ளமுடியவில்லை. இந்த விடயம் இவரது தந்தைக்கு தெரியாமலேயே நடைபெற்றுள்ளது.
இவரைப் போன்று மற்றொரு இளைஞர் டேட்டிங் செயலியை பயன்படுத்தி வெளிநாட்டில் இருந்து பேசுவதாக கூறிய பெண் ஒருவரிடம் ஏமாந்துள்ளார். இந்த இரண்டு மோடியும் கஸ்டம்ஸ் அதிகாரிகளின் பெயர்களை வைத்தே நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து வருமான வரித்துறை ஆணையர் அதிகாரி கூறுகையில், வெளிநாடுகளில் இருந்து வரும் பார்சல்கள் சுங்கத்துறை சோதனையில் சிக்கியிருந்தால் அது பற்றிய தகவலை சம்பந்தப்பட்ட அனுப்புநருக்கும் தேவைப்பட்டால் பெருநருக்கும் தெரிவிப்பது சுங்கத்துறையின் கடமை.
மூன்றாம் நபர்களிடம் இருந்து வரும் எந்தவொரு அழைப்புகளையும் முறையான விசாரணையின் நம்பக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

டெல்லி காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு அதிகாரி கூறிய யோசனைகள்:
- உங்கள் தனிப்பட்ட தகவல்களை ஃபேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக பயன்பாடுகளில், முடிந்தவரை பிரைவஸி தகவலாக வைத்திருங்கள் அல்லது அதை வெளிப்படுத்துவதை தவிருங்கள்.
- அந்நியர்களிடமிருந்தோ நிஜ வாழ்க்கையில் உங்களுக்குத் தெரியாத நபர்களிடமிருந்தோ நட்பு கோரிக்கையை ஏற்காதீர்கள்.
- ஐஎஸ்டி அழைப்பு எண்களால் ஏமாற வேண்டாம். அவற்றை செல்பேசி செயலிகள் மூலம் போலியாக உருவாக்கிக் கொள்ள முடியும்.
- முன்னறிமுகம் இல்லாத நபரின் அறிவுறுத்தல்களின்படி பணம் சிறியதாக இருந்தாலும் கூட, ஒருபோதும் டெபாசிட் செய்யாதீர்கள்.
- சுங்கத் துறை, விமான நிலைய அதிகாரிகள், வெளிநாட்டுத் தூதரகங்கள் போன்றவற்றை தொடர்புகொண்டு மோசடி செய்பவர்களின் போலியான உரிமைகோரல்களைச் சரிபார்க்கவும். இது மிக, மிக அவசியம்.
- முக்கியமாக மோசடிக்கு நீங்கள் இரையாவதாக சந்தேகப்பட்டால், பரிவர்த்தனைக்கு முன்பாகவே உங்கள் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையில் புகார் தெரிவியுங்கள். உங்களுடைய விவரம், தனியுரிமை அடையாளம் நிச்சயமாகப் பாதுகாக்கப்படும்.