"ஆறாம் நிலம்" இன்று வரை தொடரும் ஈழத் தமிழர்களின் துயரங்கள்
இன்று இலங்கை தமிழர்கள் என்று மனதில் எந்தவொரு பதட்டமும் இல்லாமல் உச்சரிக்கும் நாம் கடந்த 2009ம் ஆண்டு சற்று திருப்பி பார்த்தால், நடந்த துயரம் இன்னும் ஆறாத வடுக்களாகவே இருந்து வருகின்றது.... இதனை கண்முன் நிறுத்திய முழுநீளத் திரைப்படமே ஆறாம் நிலம்.
ஒரு பரபரப்பான விறுவிறுபான திரைப்படம் முடிந்த பிறகு, மக்கள் ஒட்டுமொத்தமாக திரையரங்கை காலி செய்வது போல, ஈழப்போரின் உச்சமான 2009 வரை அதைப் பற்றியே பேசிக்கொண்டிருந்த சர்வதேசம், அதன் பிறகு திடீரென்று ஊமையாகிப்போனது தான் மிச்சம்.
ஐபிசி தமிழின் தயாரிப்பில், ஐபிசி தமிழ் நடத்திய குறுந்திரைப்பட போட்டிகளில் வெற்றி பெற்ற இயக்குனர் ஆனந்த ரமணன் இயக்கியுள்ளார்.
சுமார் ஒன்றரை மணிநேரம் மட்டுமே இப்ப்படத்தில் ஈழத்தமிழர்களின் வலிகளையும் துயரங்களையும் வெளிப்படுத்தும் முகமாக ஆறாம் நிலம் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுவாக தமிழர்களாகிய நாம் ஐந்து நிலங்களைப் பற்றி அறிந்து வைத்திருப்போம். தற்போது அதென்ன ஆறாவதாக ஒரு நிலம்…! ஆம், இந்த நிலைத்தையும் உருவாக்கியவன் தமிழனே....
ஈழத்தில் நடைபெற்ற இறுதிப்போரின் போது லட்சக் கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதும், ஆயிரக் கணக்கில் தமிழர்கள் சிங்கள இராணுவத்தினரிடம் சரணடைந்ததும் உலகம் அறிந்த உண்மை.
ஈழம் சார்ந்து உருவாக்கப்பட்ட திரைப்படங்களிலோ அல்லது ஈழத்தில் எடுக்கப்பட்ட படங்களிலோ இதுவரை சொல்லப்படாத ஒரு கதைக் களம் இதில் பேசப்பட்டுள்ளது.
போர்க்காலத்தில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் போருக்குப் பிந்திய பத்தாண்டுகளின் பின்னாலும்கூட முற்றிலும் அகற்றப்படாத சூழல் நிலவுகின்றது.
அந்த வகையில் அந்நாட்டில் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட நிலம், காணாமல் போனோரைத் தேடும் போராட்டம், முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை ஆகியவற்றைச் சுற்றி கதை நகர்கிறது.
இவற்றை ஒன்றோடொன்று தொடர்புபடுத்திய விதமும் நகர்த்திய விதமும் பிரதிபலிப்பும் கொண்டுள்ளது. விடுதலைப் புலிகள் புதைத்து வைத்த கண்ணி வெடிகளை அகற்ற 100 நாள் வேலைத் திட்டம் போல ஒரு சமூக சேவை நிறுவனம் ஆண்களையும் பெண்களையும் அந்த நிலத்தில் இறங்கி விடுகிறார்கள்.
உயிரை கையில் பிடித்துக் கொண்டு கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஒரு பெண் குண்டு வெடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாலும் தொடர்ந்து கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
என்ன தான் இருந்தாலும் கணவனை இழந்தாலும் கற்பை இழக்க விரும்பவில்லை என்று ஒரு சம்பவத்தின் மூலம் அவர்களின் நேர்மையான வாழ்க்கையை படம் பிடித்து காட்டியிருக்கிறார் இயக்குனர்.
முதன்மைப் பாத்திரங்களை ஏற்று நவயுகா குகராஜா அவரது மகளாக ஜீவேஸ்வரன் அன்பரசி மற்றும் மன்மதன் பாஸ்கி ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
கணவனைத் தேடும் பெண்ணாக, பிள்ளைக்குத் தாயாக, போருக்குப் பின்னான வாழ்வின் அத்தனை நெருக்கடிகளுக்கும், சமூக அழுத்தங்களுக்கும், மனப்போராட்டங்களுக்கும் முகம் கொடுக்கும் பெண்ணாக மிகத் தேர்ந்த நடிப்பின் மூலம் அந்தப் பாத்திரத்திற்கு உயிர்கொடுத்திருக்கின்றார் நவயுகா.
முன்னாள் போராளியாக, கண்ணிவெடி அகற்றும் குழுவின் பொறுப்பாளனாக பாஸ்கியினுடைய நடிப்பு இயல்புத் தன்மையுடன் வெளிப்பட்டிருக்கின்றது. ஏனைய பாத்திரங்களும் தமது பங்கினைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.
கண்ணிவெடி அகற்றும் பணிக்குரிய அந்த நிலம், அதற்குரிய தொழில்நுட்ப நுணுக்கங்களுடன் படமாக்கிய விதம் இதன் சிறப்பு. அந்தப் பணி இடம், அதற்கான பணியாளர் ஒருங்கிணைப்பு, உடை என்பன கச்சிதமான காட்சிகளை வெளிப்படுத்துகின்றது.
கதையின் முடிச்சுகளுக்கு இறுதியில் முடிவு சொல்லாமல் விட்டதால் யதார்த்தம் மிளிர்கிரது.
கடந்த 2009ம் ஆண்டில் மே மாதம் நடைபெற்ற அந்த மரண ஓலத்தினை படமாக இது எடுக்கப்பட்டிருந்தாலும், பக்கத்திலிருந்து பார்ப்பது போன்ற உணர்வோடு கண்களில் கண்ணீரே ததும்பி நிற்கின்றது.
ஐ பி சி தமிழ் புரடக்ஷன் தயாரித்துள்ள இப்படத்தை அனந்த ராமன் பல வலிகளை உள்ளடக்கிய கதையாக படமாக்கி இருக்கிறார்.