இலங்கையில் ஒரு எரிவாயு சிலிண்டர் 21 ஆயிரம் ரூபாய்....முடங்கிய சமூக ஊடகங்கள்
இலங்கையில் தொடரும் அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக லிட்ரோ வெற்று எரிவாயு சிலிண்டரின் விலை 21,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.
வெற்று எரிவாயு சிலிண்டர்களை விற்கும் விளம்பர இணையத்தளங்கள் இது தொடர்பில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
12.5 கிலோ எடையுள்ள லாஃப்ஸ் வெற்று எரிவாயு சிலிண்டர் ரூ.16,000 வரையும், 5 கிலோ சிலிண்டர் ரூ.9,900க்கும் விற்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சமூக ஊடகங்கள் முடக்கம்
இலங்கையில் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது டுவிட்டர், வட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் செயற்படவில்லை.
அரசாங்கத்திற்கெதிரான மக்கள் போராட்டமானது மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் இன்றும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பிலான புகைப்படங்கள், காணொளிகளை பொது மக்கள் தொடர்ச்சியாக சமூக ஊடகங்களில் வெளியிட்டு அரசாங்கத்திற்கெதிரான எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.
மேலும், இன்றைய தினம் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்க சமூக ஊடகங்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இலங்கை சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.