இலங்கை எழில் கொஞ்சும் நீர் வீழ்ச்சிகள்…
இந்து சமுத்திரத்தின் நித்திலம் எனப் போற்றப்படும் இலங்கையின் அழகுத் தோற்றத்திற்கு பஞ்சமில்லை அந்த எழில் தோற்றத்தை மேலும் மெருகூட்டும் வகையில் நீர்வீழ்ச்சிகள் காணப்படுகின்றன.
சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையிலான இந்த நீர்வீழ்ச்சிகள் சில பற்றி அறிந்து கொள்வோம்…
பேக்கர்ஸ் நீர்வீழ்ச்சி Bakers Falls
image - wikipedia
ஹோட்டர்ன் சமவெளி தேசிய பூங்காவில் இந்த நீர்வீழ்ச்சி அமைய பெற்றுள்ளது. இந்த நீர் வீழ்ச்சியின் உயரம் சுமார் 20 மீட்டர்கள் ஆகும் பிரபல பிரித்தானிய ஆய்வு பயணியான சேர் சமுவெல் பேக்கர் என்பவரின் பெயர் இந்த நீர்வீழ்ச்சிக்கு சூட்டப்பட்டுள்ளது. பசுமையான புல்வெளிகளுக்கு மத்தியில் அழகு தோற்றத்துடன் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
ராவணன் நீர்வீழ்ச்சி Rawana Ella
image - Photo Credit: Flickr
ராவணன் நீர்வீழ்ச்சி பண்டாரவளை பகுதியிலிருந்து சுமார் 11 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இந்த நீர்வீழ்ச்சியானது பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நீர்வீழ்ச்சி சுமார் 25 மீட்டர் உயரத்தைக் கொண்டமைந்துள்ளது. இலங்கையில் காணப்படும் மிக அதிக அகலத்தைக் கொண்ட நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக இந்த நீர்வீழ்ச்சியை காணப்படுகிறது. மழை நேரத்தில் இந்த நீர்வீழ்ச்சி மிகுந்த அழகு தோற்றத்துடன் காணப்படும் அதேவேளை பருவநிலை மாற்றத்தின் போது இந்த நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் குறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இராமாயண கதையில் கூறப்படும் ராவண சக்கரவர்த்தியின் பெயர் இந்த நீர்வீழ்ச்சிக்கு சூட்டப்பட்டுள்ளது.
துந்ஹிந்த நீர்வீழ்ச்சி Dunhinda Falls
image - attractionsinsrilanka
இந்த நீர் வீழ்ச்சி பதுளை மாவட்டத்தில் காணப்படுகின்றது. பதுளை நகரில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியின் உயரம் 64 மீட்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலிந்து விழும் நீர்த் தாரைகள் கீழே விழுவதினால் நுரையுடனான பனிப் படலத்தை காண முடியும் என்பது இதன் விசேட அம்சமாகும்
சென் கிளயார் நீர்வீழ்ச்சி St Clairs Falls
Image: Sri Lanka Tour Hub
நுவரெலியா மாவட்டம் தலவாக்கலை நகரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியின் உயரம் சுமார் 80 மீட்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சென் கிளயார் நீர்வீழ்ச்சி இலங்கையின் சிறிய நயாகரா என வர்ணிக்கப்படுகிறது. அருகாமையில் காணப்படும் தேயிலைத் தோட்டம் ஒன்றின் பெயரை இந்த சென் கிளயார் நீர்வீழ்ச்சிக்கு சூட்டப்பட்டுள்ளது. இலங்கையின் மிக அழகிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக இந்த நீர்வீழ்ச்சி கருதப்படுகின்றது
டெவன் நீர்வீழ்ச்சி Devon Falls
image - travellankaconnection
நுவரெலியா மாவட்டம் தலவாக்கலை நகரில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் டெவன் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியின் உயரம் 97 மீட்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் மிக உயரமான நீர்வீழ்ச்சிகளில் இந்த நீர்வீழ்ச்சி 19ஆம் இடத்தை வகிக்கின்றது.
பிரபல கோபி செய்கையாளர் டெவன் என்பவரின் பெயர் இந்த நீர்வீழ்ச்சிக்கு சூட்டப்பட்டுள்ளது.
ரம்பொட நீர்வீழ்ச்சி Ramboda Falls
image -attractionsinsrilanka
இலங்கையின் பதினோராவது உயர்ந்த நீர் வீழ்ச்சியாக ரம்பொட நீர்வீழ்ச்சி கருதப்படுகிறது. நுவரெலியா மாவட்டம் புஸ்ஸல்லாவை நகருக்கு அருகாமையில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியின் உயரம் சுமார் 109 மீட்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடல் மட்டத்திலிருந்து 945 மீட்டர்கள் உயரத்தில் இந்த ரம்பொட நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சியும் மிக அழகிய தோற்றத்தை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தியலும நீர்வீழ்ச்சி Diyaluma Falls
image - attractionsinsrilanka
இலங்கையின் மிக உயரமான நீர்வீழ்ச்சிகளின் வரிசையில் இரண்டாம் இடத்தையும் உலகின் உயரமான நீர் வீழ்ச்சிகள் வரிசையில் ஆறாம் இடத்தையும் கொண்ட இந்த நீர்வீழ்ச்சியும் பதுளை மாவட்டத்தை அமைந்துள்ளது. பதுளை கொஸ்லந்த பகுதியில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியின் உயரம் 220 மீட்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பம்பரக்கந்த நீர்வீழ்ச்சி Bambarakanda Falls
image - wikipedia
இலங்கையின் மிக உயரமான நீர்வீழ்ச்சியாக பம்பரகந்த நீர்வீழ்ச்சி கருதப்படுகிறது.
இந்த நீர் வீழ்ச்சியின் உயரம் 263 மீட்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கொழும்பு மட்டக்களப்பு அதிவேக நெடுஞ்சாலையானு நெடுஞ்சாலை வழியாக இந்த நீர்வீழ்ச்சி இருக்கும் இடத்தை அடைய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.