வீட்டில் மாங்காய் இருக்கா? அப்போ சுட்ட மாங்காய் கார ரசம் இப்படி செய்ங்க
இந்த மாங்காய் சிசனில் வீட்டில் மாங்காய்க்கு குறைவே இருக்காது. மாங்காயின் சுவை வேறு எந்த பழத்தாலும் கொடுக்க முடியாத ஒரு தனித்துவமான சுவை.
மாங்காயை ஊறுகாய் போடுவதை நிறுத்தி விட்டு இனி மாங்காயை வைத்து ஊறுகாய் போடாமல் இந்த ரெசிபியை செய்து பாருங்கள் இன்னும் இன்னும் சாப்பிட கேட்கும். வாங்க இதை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சுட்டு அரைப்பதற்கு
- கிளிமூக்கு மாங்காய் - 2
- பச்சை மிளகாய் - 4
- நல்லெண்ணெய் - சிறிது
- தண்ணீர் - 3/4 டம்ளர்
தாளிப்பதற்கு
- நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
- வரமிளகாய் - 4
- கடுகு - 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- சின்ன வெங்காயம் - 50 கிராம்
- சீரகம் - 1/4 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- பெருங்காயத் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
- உப்பு - சுவைக்கேற்ப
- தண்ணீர் - 1/2 லிட்டர்
- நாட்டுச்சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
- கொத்தமல்லி - 1 கைப்பிடி
செய்முறை
முதலில் மாங்காயை எடுத்து அதில் நல்லெண்ணெய் தடவி, ஒரு கம்பியில் சொருகி, நெருப்பில் நன்கு சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். இது நன்றாக சுட்டதும் சுடுநீரில் போட்டு அதை குளிவிக்கவும்.
அதன் பின் பச்சை மிளகாயில் நல்லெண்ணெய் தடவி, அதையும் கம்பியில் சொருகி, அதையும் நெருப்பில் சுட்டு எடுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் நீரில் உள்ள மாங்காயை எடுத்து அதை தோலை நீக்கி அதன் சதைப் பகுதியை ஒரு கிண்ணத்தில் பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் மிக்சியில் மாங்காய் மற்றும் சுட்ட பச்சை மிளகாயை சேர்த்து 3/4 டம்ளர் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
அதன் பின்னர் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். பின் அதில் சீரகம், பெருங்காயத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும்.
பின்பு அதில் அரைத்து வைத்துள்ள மாங்காய் விழுதை சேர்த்து, 1/2 லிட்டர் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.
பிறகு அதில் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கிளறி, ரசம் ஒரு கொதி வந்ததும், அதில் கொத்தமல்லியைத் தூவி அடுப்பை அணைத்துவிட்டால், சுவையான சுட்ட மாங்காய் கார ரசம் தயார். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சூடான சாதத்தில் லைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
