சளி இருமலை உடனே குணப்படுத்தும் நண்டு சூப்! காரசாரமாக இப்படி செய்து குடுங்க
பொதுவாகவே காலநிலை மாறும் போது குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்ளுக்கும் சரி சளியும் இருமலும் வந்துவிடுகின்றது.
சளி இருமல் வந்துவிட்டால் கூடவே தொண்டைவலியும் வந்துவிடும் சில வேளைகளில் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சல் ஏற்படும் வாய்ப்பும் காணப்படுகின்றது.

சளி, இருமல் வந்துவிட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தி மீண்டு வருவதே சிறந்தது அந்தவகையில் காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு நண்டு நண்டு சூப் உடனடி தீர்வு கொடுக்கும்.
கிராம புறங்களில் கை வைத்தியமாக வயல் வெளியில் கிடைக்கும் நண்டுகளை வைத்து ரசம் மற்றும் சூப் செய்து சாப்பிடுவது வழக்கம்.
நண்டில் பாஸ்பரஸ் அதிகம் காணப்படுகின்றது. இது மூளையின் சிறந்த செயற்பாட்டிற்கும், பற்களை வலிமையாக்கவும் உதவுகின்றது.

இதில், வைட்டமின் A செறிவாக இருப்பதால், கண்பார்வைக்கு பெரும் நன்மை வழங்குகின்றது.கருத்தரிக்க முயற்சி செய்யும் பெண்களுக்கும் நண்டு சூப் சிறந்த தெரிவாக இருக்கும்.
வாரத்திற்கு ஒரு முறை நண்டு சூப் குடிப்பது சிறந்த ஆரோக்கிய பலன்களை கொடுக்கும். அப்படி மருத்துவ குணம் நிறைந்த நண்டு சூப்பை வீட்டிலேயே காரசாரமான சுவையில் எளிமையாக எவ்வாறு தயார் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
நண்டு - 2
தக்காளி - 1
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி - சிறு துண்டு
மிளகு - 1/2 தே.கரண்டி
சீரகம் - 1/4 தே.கரண்டி
எண்ணெய் - 3 தே. கரண்டி
பூண்டு - 4 பல்
பச்சைமிளகாய் - 2
பட்டை - தேவையான அளவு
பிரியாணி இலை - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - தேவையான அளவு
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை
முதலில் நண்டை நன்றாக சுத்தம் செய்து, நண்டின் சதைப்பகுதி வெளியில் வரும் வகையில் தட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் இஞ்சி, பூண்டையும் தட்டிக் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, பட்டை, பிரியாணி இலை, வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

அவை அனைத்தும் நன்றாக வதங்கியதும் அரிசி கழுவிய தண்ணீர் அல்லது குடிக்கும் தண்ணீரை போதுமான அளவு சேர்த்து தண்ணீர் நன்றாக கொதித்ததும் நண்டு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேகவிட வேண்டும்.
நண்டு நன்றாக வெந்ததன் பின்னர் மிளகு, சீரகத்தூள் போட்டு நன்றாக கிளறிவிட வேண்டும். இறுதியாக நண்டு ஓடு அடியில் இருக்கும் என்பதால் வடிகட்டி விட்டு கொத்தமல்லி இலை தூவினால் அசத்தல் சுவையில் காரசாரமாக நண்டு சூப் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |