மசாலாப் பொருட்களால் உருவான பிரம்மாண்ட ஓவியம் - உலக சாதனை படைத்த இந்தியக் கலைஞர்!
சமையலறையில் அன்றாடம் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களை ஓவியத்துக்கான வண்ணங்களாக மாற்றி, பிரம்மாண்டமான கலைப்படைப்பை உருவாக்கி இந்தியக் கலைஞர் அமர் ராஜு காலே உலக சாதனை படைத்துள்ளார்.
உலக சாதனை
கர்நாடகாவின் தார்வாட் பகுதியில், 2026 ஜனவரி 27ஆம் தேதி அவர் உருவாக்கிய இந்த ஓவியம் 175.82 சதுர மீட்டர் (சுமார் 1,892.5 சதுர அடி) பரப்பளவு கொண்டது.

உலகின் மிகப்பெரிய மசாலா ஓவியமாக இந்தச் சாதனையை Guinness World Records அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.
இந்த ஓவியத்தின் தனிச்சிறப்பு அதன் பிரம்மாண்டமான அளவு மட்டுமல்ல, அதற்குப் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்களும்தான். வழக்கமான பெயிண்ட்களுக்குப் பதிலாக, மஞ்சள், மிளகாய் உள்ளிட்ட மசாலாப் பொருட்களின் இயற்கையான நிறங்களைப் பயன்படுத்தி இந்தக் கலைப்படைப்பை உருவாக்கியுள்ளார் அமர்.
இவ்வளவு பெரிய பரப்பில் நிறங்களையும் வடிவங்களையும் சீராக அமைப்பதற்கு கலைத்திறனுடன் பொறுமையும் திட்டமிடலும் முக்கிய இடம் வகித்துள்ளது.
இந்தியாவின் வரலாற்று மற்றும் கலாசாரப் பெருமையைப் பிரதிபலிக்கும் வகையில், கர்நாடகாவின் புகழ்பெற்ற ஹம்பி கல் தேரின் உருவம் இந்த ஓவியத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் மசாலா பாரம்பரியத்தையும் வரலாற்றுச் சின்னத்தையும் ஒரே படைப்பில் இணைத்திருப்பது இதற்குத் தனித்துவத்தை அளிக்கிறது.
இந்தியக் கலைஞரான அமர் ராஜு காலே, இதற்கு முன்பும் வழக்கத்திற்கு மாறான ஓவிய முறைகளால் கவனம் பெற்றவர். குறிப்பாக, வாயில் தூரிகையைப் பிடித்து ஓவியம் வரையும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.
சமையலறையில் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் பொருட்களைக்கூட புதுமையான சிந்தனையால் உலகம் வியக்கும் கலைப்படைப்பாக மாற்ற முடியும் என்பதை அமர் காலேவின் இந்த முயற்சி பறைசாற்றுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |