பாடி மக்களை உருக வைத்த நிலா! எஸ்.பி.பியின் முதலாம் ஆண்டு நினைவு தினம்; சிறப்பு செய்தி
இந்தியா முழுக்க பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் பாடி ஜொலிஜொலித்து சாதனைகள் மேல் சாதனை படைத்த ஒரே ஜாம்பவான் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மட்டுமே. தற்போது, எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதலாமாண்டு நினைவு தினத்தில் திரும்பிய திசையெல்லாம் ரசிகர்கள் அவரது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
இன்று வரை எஸ்பிபியின் பாட்டைக் கேட்டுத்தான் உறங்குகிறேன் என்று சொல்பவர்கள் லட்சோபலட்சம்பேர். அவரின் குரல் கேட்காமல் எங்கள் பயணமே முடியாது என்று சொல்பவர்களின் எண்ணிக்கை ஏட்டில் அடங்காது. திரையுலகில் எஸ்பிபியின் குரலுக்கே வயது 55.. ஆம் 1966 ல் பாடவந்தவர்.
கடந்த ஆண்டு மருத்துவமனைக்குப் போய் இறுதிப்பயணம் காணும் வரை பாடிக்கொண்டேதான் இருந்தார். ஆரம்ப காலகட்டத்தில் தனது தமிழ் உச்சரிப்புக்காக புறக்கணிக்கப்பட்ட எஸ்பிபி, எம்.எஸ்.விஸ்வநாதன் ஆலோசனையை ஏற்று ஒரு வருடம் பயிற்சி பெற்று சினிமாவில் பாடும் வாய்ப்பை பெற்றார். சாந்தி நிலையம் படத்திற்காக பி.சுசிலாவுடன் இணைந்து பாடிய "இயற்கை என்னும் இளைய கன்னி" பாடல் தான் எஸ்பிபி பாடிய முதல் தமிழ் சினிமா பாடலாக கருதப்படுகிறது.
அதைத் தொடர்ந்து எம்ஜிஆருக்காக அடிமைப்பெண் படத்தில் அவர் பாடியா "ஆயிரம் நிலவே வா" பாடல் மிகப் பெரிய ஹிட்டானது. வெற்றிக் கொடி நாட்டியவர் எஸ்பிபி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 6 மொழிகளிலும் காலத்தால் அழிக்க முடியாத, நெஞ்சை விட்டு அகலாத பல ஆயிரக் கணக்கான பாடல்களை தனது காந்த குரலால் பாடியவர் எஸ்பிபி.
மேலும், ஏ.ஆர் ரஹ்மான் தலைமுறை தொடங்கி அனிருத் தலைமுறை வரை பல இசையமைப்பாளர்களின் இசையில் தனது காந்த குரலால் ரசிகர்களை வசீகரித்தார். நான்கு மொழிகளில் சிறந்த பாடகருக்கான தேசிய திரைப்பட விருதினை 6 முறை வென்ற எஸ்பிபி, தெலுங்கு சினிமாவிற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக ஆந்திரா மாநில அரசின் நந்தி விருதினை 25 முறை பெற்றுள்ளார்.
ஏராளமான தமிழக மற்றும் கர்நாடக அரசு விருதுகளையும் பெற்றுள்ளார். இவர், கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ம் தேதி காலமானார். கொரோனா பாதிப்பை தொடர்ந்து ஏற்பட்ட பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்பிபி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர் ஓய்வடைந்து இன்றோடு ஒருவருடம் ஆனாதை முன்னிட்டு நடிகர்கள், திரைக்கலைஞர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அவரை பற்றி நினைவுகளை சமூகவலைதளங்களில் பதிவிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.