தென்னாப்பிரிக்கா ஒரு நாள் தொடரில் ரோகித் இல்லையா? விழிபிதுங்கி நிற்கும் பிசிசிஐ!
கடந்த சில நாட்களாகவே பிசிசிஐ அதிரடி முடிவால், இந்திய அணியில் கேப்டனுக்காக பெரிய அளவில் பிரச்சினை வெடித்து வந்தது. அதற்கு எல்லாம், விராட்கோலி பதிலடி கொடுத்தார். தற்போது இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கான உடற்தகுதி தேர்வுகளில் ரோகித் சர்மா திணறி வருகிறாராம்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடி முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிக்கண்டது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்கவுள்ளது.
இந்த போட்டி தொடர் ஆனது ஜனவரி 19ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் இதற்கான இந்திய அணி இன்னும் தேர்வு செய்யப்படவில்லை.
இதற்கு, முக்கிய காரணம் கேப்டன் ரோகித் சர்மாவின் உடல்நிலை தான். நியூசிலாந்து தொடரின் போது காலில் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்ட அவர், தற்போது பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார்.
மேலும், ரோகித்தின் உடல்நிலையில் சரியான முடிவு தெரியாமல் எப்படி அணியை உருவாக்க முடியும் என்ற குழப்பத்தில் பிசிசிஐ விழிபிதுங்கி நிற்கிறது. இந்நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற முதல் உடற்தகுதி தேர்வில் ரோகித் சர்மா தேர்ச்சிப் பெற்றுவிட்டார்.
ஆனால், கடைசிகட்ட தேர்வுக்கு அவர் சரியான தகுதியுடன் இல்லை எனத்தெரிகிறது. இதனால் கடைசி உடற்தகுதி தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், ரோகித்திற்கு சிறிய கால அவகாசம் கொடுக்கப்பட்டு அதன் பிறகு தேர்வு நடத்தப்படவுள்ளதாக தெரிகிறது.
இதனிடையே பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், ரோகித்தின் உடல்நிலை 24 மணி நேரத்திற்குள் என்ன நிலைமை இருக்கிறதோ, அதனை வைத்து தான் முடிவு எட்டப்படும். ரோகித் சர்மா இல்லையென்றாலும், அணியை வழிநடத்த கே.எல்.ராகுல் உள்ளார்.
அவருக்கு பக்கபலமாய் விராட் கோலி உள்ளார். எனவே ரோகித் சர்மா அணியில் இடம்பெறவில்லை என்றாலும் இந்திய அணிக்கு பெரிய பாதிப்பாக இருக்காது என தெரிவித்துள்ளார்.