கொதித்தெழுந்த மாணவிகள்.. சிவசங்கர் பாபா வழக்கில் அடுத்த வலைவீச்சு
பள்ளி மாணவிகள் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கரின் பாபாவிடம் இருந்து விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா இப்பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த நாட்களுக்கு முன்பு புகார்கள் அளிக்கப்பட்டன.
இந்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து, சிவசங்கர் பாபாவிற்காக மாணவிகளை மூளை சலவை செய்ததாக அவரத பெண் பக்தர் சுஷ்மிதாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் பள்ளியின் ஆசிரியை தீபா வெங்கடராமன், பள்ளி நிர்வாகி ஜானகி சீனிவாசன், அவரது மருமகளும் பாபாவின் பெண் பக்தருமான பாரதி, திவ்யா பாலசுப்பிரமணியம், கனகாம்பிகை ஆகியோர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதில், 2010-12ஆம் ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவிகள் அளித்த புகாரில் சிபிசிஐடி காவல்துறையினர், போக்சா சட்டம் மற்றும் பெண்கள் துன்புறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், சிவசங்கர் பாபா மீதான வழக்கில் தேவையில்லாமல் தங்களையும் சேர்த்துள்ளதாகவும் சிபிசிஐடி காவல்துறையினர் மீது புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாலியல் தொல்லை குற்றச்சாட்டுக்கு ஆளான சிவசங்கர் பாபா மற்றும் அவருக்கு உதவியதாக புகாருக்கு அளிக்கப்பட்டவர்களுக்கு எதிராக, பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவிகள் விசாரணை நீதிமன்றத்தில் அளித்த ஒப்புதல் வாக்குமூலங்களை காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
மேலும், இந்த விவகாரத்தில் பதிவான 3 வழக்குகளின் விசாரணை தொடர்பாக முதல் தகவலை அறிக்கையாக தாக்கல் செய்ய உள்ளதாகவும், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
இதனால், மூன்று வழக்குகளின் முதல் தகவல் அறிக்கைகள் உள்ளிட்ட வழக்கு தொடர்பான ஆவணங்களை மனுதாரர்கள் தரப்புக்கு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணை வரும் (ஜூலை 5) நீதிபதி தள்ளிவைத்தார்.