தண்டவாளத்தில் சடலமாக கிடந்த பிரபல பாடகியின் தந்தை: பின்னணியில் நடந்தது என்ன?
தெலுங்கு சினிமாவின் பிரபல பின்னணி பாடகியான ஹரிணி ராவ் தந்தை A.K.ராவ் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டு உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
தெலுங்கு சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வருபவர் ஹரிணி ராவ். இவருடைய தந்தை A.K.ராவ் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களுரு அருகே ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார்.
ஸ்ரீநகர் காலனியில் தனது குடும்பத்தினருடன் வசித்துவரும் ஹரிணியின் தந்தை A.K.ராவ் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொழில் சார்ந்த விஷயங்களுக்காக பெங்களூரு சென்றுள்ளார்.
கடந்த நவம்பர் 13 ஆம் தேதி பெங்களூர் சென்ற அவர் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியதாகக் கூறப்படும் நிலையில் கடந்த 21ம் தேதி அந்த அறையில் இருந்து புறப்படுவதற்கு வாகனத்தை பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் பெங்களூர் நகரத்தை அடுத்த யெலஹங்கா மற்றும் ராஜனுகுண்டே இடையே உள்ள தண்டவாளத்தில் கடந்த 21 ஆம் தேதி A.K.ராவ் சடலமாக கிடந்துள்ளார்.
மேலும் அவருடைய நெற்றி, மணிக்கட்டு, கழுத்தில் வெட்டுக்காயங்கள் இருந்ததாகக் கூறப்படும் நிலையில் அவருடைய உடலுக்கு அருகே கத்திரிக்கோல் மற்றும் கத்தி இருந்ததாகவும் பொலிசார் தகவல் தெரிவித்து உள்ளனர்.
கடந்த 19 ஆம் தேதி ஹரிணியின் சகோதரி தனது தந்தையிடம் பேசியதாகக் கூறப்பட்ட நிலையில் பின்பு அவர் சடலமாக மீட்கப்பட்டு உள்ளது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை ரயில்வே பொலிசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.