ஆறு மாதம் தூங்காமல் உழைத்தேன்! எஞ்சாயி எஞ்சாமி பாடல் சர்ச்சைக்கு அறிவு பதிலடி
இந்திய வரலாற்றில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் அதிலும் குறிப்பாக நமது மாநிலமான தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில், 186 நாடுகளில் இருந்து 2,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் சென்னை வந்துள்ளனர். இவர்களுக்கான வரவேற்பு முதல் வழியனுப்புவது வரை தமிழக அரசே அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்றிருக்கிறது.
பல பிரம்மாண்ட நிகழ்ச்சிகள் நடைப்பெற்ற நிலையில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான 'என்ஜாயி எஞ்சாமி' பாடல் அனைவரது முன்னிலையிலும் பாடப்பட்டது.
ஆனால் இதை எழுதிப் பாடியிருந்த அறிவு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அவர் ஏன் எந்த இடத்திலும் பதிவு செய்யப்படவில்லை என கேள்விகள் எழுந்தன.

இன்ஸ்டாவில் உருக்கம்
இந்த நிலையில், இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இப்பாடலை எழுதி, கம்போஸ் செய்து பாடியது நான். இது அனைவரும் சேர்ந்து செய்த கூட்டு முயற்சிதான்.
அதில் எந்த வித சந்தேகமில்லை. ஆனால் இதை எழுதுவதற்கு யாரும் எனக்கு மெட்டுகள் தரவில்லை, ஒரு வார்த்தையைக்கூட யாரும் தரவில்லை. கிட்டதட்ட 6 மாதங்களாக தூங்காமல் கடுமையாக இதற்காக உழைத்திருக்கிறேன்.
மேலும், இப்பாடலானது வள்ளியம்மாள் போன்ற நிலம் இல்லாத தேயிலை தொழிலாளர்களை பற்றியது மட்டும் அல்ல, என்னுடைய எல்லாப் பாடல்களும் ஒடுக்கப்பட்ட தலைமுறைகளின் வலியை பற்றியது.

இது போல் இன்னும் 10,000 நாட்டுப்புற பாடல்கள் இந்த மண்ணில் இருந்துள்ளது. இவை அனைத்துமே நம் முன்னோர்களின் வாழ்வியல், அவர்களின் நிலம் பற்றியது.
இந்த பாடலை அனைவரும் ஒரு அழகான பாடலாக பார்க்கிறார்கள். இதில், பல தலைமுறைகளின் வியர்வையும் இரத்தமும் கலந்த வலியைக் கேட்கும் படி இனிமையான பாடலாக உருவாக்கியுள்ளோம்.
நீங்கள் தூங்கும் போதுதான் உங்கள் செல்வங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன, விழித்திருக்கும்போது அல்ல. ஜெய்பீம் கடைசியில் உண்மைதான் எப்போதும் வெல்லும் என தெரிவித்துள்ளார்.