600 நாட்களுக்கு பின் பள்ளிகள் திறப்பு - அமலுக்கு வந்த கூடுதல் தளர்வுகள்
கொரோனா வைரஸ் பாதிப்பால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், கிட்டதட்ட 600 நாட்களுக்கு பின்பு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
1 முதல் 8 வகுப்பு வரையிலான பள்ளிகள் நவம்பர் 1 முதல் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சுழற்சி முறையில், தினமும் பள்ளிக்கு வந்து செல்லும் வகையில் ஆர்வமூட்டி, மகிழ்ச்சியுடன் அவர்களை நடத்த, பல்வேறு முயற்சிகளை பள்ளிகள் மேற்கொண்டுள்ளன.
இதுமட்டுமின்றி ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன. திரையரங்குகளில் நூறு சதவீத பாா்வையாளா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.
கூட்ட அரங்குகளில் அனைத்து வகையான கலாசார நிகழ்வுகள் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுபானக் கூடங்கள் இன்று முதல் செயல்பட உள்ளன. மதுபானக் கூடத்தின் நுழைவு வாயிலில் கிருமி நாசினி மற்றும் உடல் வெப்பநிலையை பரிசோதிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு வாடிக்கையாளரின் விவரங்களையும், தொடா்பு எண்ணையும் பெற வேண்டும். இதற்கென தனி பதிவேட்டை பராமரிக்க வேண்டும். அனைத்து வகையான உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகளில் பயிற்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதன்பின், மாவட்டத்துக்குள்ளேயும், மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலும் சாதாரண மற்றும் குளிா்சாதனப் பேருந்துகளை நூறு சதவீத இருக்கைகளுடன் இயக்க அனுமதி தரப்பட்டுள்ளது.
மேலும், அரசின் சாா்பில் பயிற்சி தரப்படும் நிலையங்களும் நூறு சதவீத இயங்கிக் கொள்ளலாம்.
கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் அனைத்துக் கடைகளுக்கும் நேரக்கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.