அரசியலில் இருந்து சசிகலா அதிரடியாக விலக இதுதான் காரணமா? வெளியான பரபரப்பு தகவல்!
தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக சசிகலா வெளியிட்ட அறிக்கை தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், சிறையில் இருந்து வந்தவுடன் அதிமுகவை அவர் கைப்பற்றுவார் என கூறப்பட்டு வந்த நிலையில், அரசியல் விட்டு விலகுவதாக அவர் அறிவித்திருப்பது, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் என்றும் வணங்கும் என் அக்கா புரட்சித் தலைவியின் எண்ணத்திற்கு இணங்க அவர் கூறியபடி இன்னும் 100 ஆண்டுக்கு மேலாக, தமிழகத்தில் புரட்சித் தலைவர் மற்றும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சி தொடர, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளான அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும்.
நம்முடைய பொது எதிரி தீயசக்தி என்று அம்மா நமக்கு காட்டிய திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து விவேகமாக இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அம்மாவின் தொண்டர்கள் பாடுபடவேண்டும். என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய அம்மாவின் உண்மைத் தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள்.
அம்மா அவர்கள் உயிருடன் இருந்தபோது, எப்படி அவர் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ, அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன். நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ,அதிகாரத்திற்காகவோஆசைப்பட்டதில்லை. புரட்சித்தலைவியின் அன்பு தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.
நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கும் என் அக்கா புரட்சித்தலைவியிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பேன் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சசிகலா விலகல் குறித்து டிடிவி தினகரன் அளித்த பேட்டியில், "அரசியலைவிட்டு ஒதுங்குவதாக சசிகலா அறிக்கை வெளியிட்டிருப்பது எனக்கு வேதனையளிக்கிறது.
மேலும், தொண்டர்கள் ஒற்றுமையாக இருப்பார்களே என்பதாலேயே அவர் அப்படி சொல்லியிருக்கிறார். அதை அவரே அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தான் ஒதுங்கி இருந்தால்தான் எல்லோரும் ஒற்றுமையாக இருப்பார்கள் என அவர் நம்புவதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். தேர்தல் களத்தில் தான் ஒரு பேசுபொருளாக இருக்க அவர் விரும்பவில்லை என்பதால் இத்தகைய முடிவை எடுத்திருக்கிறார். அதனால், அரசியலைவிட்டு சசிகலா ஒதுங்குவதால் இனி பின்னடைவு என்றெல்லாம் சொல்லிவிட முடியாது.
ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமையவேண்டும் என அவர் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். அவருடைய சுயமான முடிவு இது. எனது சித்தி என்பதற்காக அவர் மீது எனது கருத்துகளை நான் திணிக்க இயலாது. அவரின் மனசாட்சியாக நான் பேசவும் முடியாது" என்றார். இதனையடுத்து, பேட்டியளித்த பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன், சசிகலா அரசியலில் இருந்து விலக பாஜகதான் காரணம் என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுகவிலோ, அரசாங்கத்திலோ எது நடந்தாலும், பாஜக பின்னணியில் இருந்து அழுத்தம் கொடுக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு வேண்டுமென்றே பரப்பப்பட்டு வருகிறது.
ஆனால், தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. எனவே சசிகலா விவகாரத்தில் அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அதற்கும் பாஜகவிற்கு எந்த சம்பந்தமும் இல்லை என பல தலைவர்கள் விளக்கமளித்து விட்டனர்.
அப்படி அழுத்தம் கொடுத்து விலக்க வேண்டிய நிலையில் சசிகலா உள்ளாரா.? அவ்வாறு அழுத்தம் கொடுத்திருந்தால் அவர் வெளிப்படையாக சொல்லி இருக்கலாமே.? வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார். இதுபோன்ற தகவல்கள் அரசியல் காரணங்களுக்காக பரப்பப்பட்டு வருவதாகக் கூறினார்.