புகைப்பிடிக்க முதியவர் பற்ற வைத்த தீ.. சானிடைசரால் உடல் முழுவதும் பரவிய துயரம்!
பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்க அரசு முககவசம் அணிய வேண்டும் என்பதையும், சானிடைசரை பயன்படுத்த வேண்டும் என்பதையும் அறிவுறுத்து வருகிறது.
இதனால், கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள வீடு மற்றும் அலுவலகங்கள், கடைகள் என அனைத்துப் பகுதிகளிலும் சானிடைசர் பயன்படுத்தி வருகின்றனர்.
என்னதான், சானிடைசர் பயன்படுத்தி வந்தாலும், அதனை பாதுகாப்புடன் கையாள வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடையே இல்லாமல் இருக்கிறது.
அந்த வகையில், சென்னை அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த முதியவர் ரூபன் (50). இவர் கோடம்பாக்கம் மருத்துவர் சுப்பராயன் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் இயங்கி வரும் பதிப்பகத்தில் பணியாற்றி வருகிறார்.
அலுவலக பணி காரணமாக வெளியே சென்றுவிட்டு, மீண்டும் அலுவலகத்திற்கு வந்து ரூபன் கைகளை சுத்தம் செய்துள்ளார். அதன் பின்னர், அந்த முதியவர் அலட்சியமாக சானிடைசர் உபயோகம் செய்த கையுடன் சிகரெட்டைப் பற்றவைத்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக, முதியவர் உடலில் முழுவதும் தீ பிடித்துள்ளது. உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.
மேலும், இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து போலீசார் அறிவுரையில், சானிடைசர் எளிதில் தீப்பற்றக் கூடியது. ஏனெனில், அது ஆல்கஹால் சம்பந்தப்பட்ட சானிடைசர் ஆகும்.
இது போன்ற செயல்களில் இனி யாரும் ஈடுபடக்கூடாது. சானிடைசரில் அறுபது விழுக்காட்டுக்கு மேல் ஈத்தைல் ஆல்கஹால் இருப்பதால், இது எளிதில் தீப்பற்றக் கூடிய தன்மை உள்ளது.
சானிடைசர் பயன்படுத்தி சில வினாடிகளில் அது உலர்ந்துவிட்டால் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை.
மாறாக பயன்படுத்திவிட்டு உடனடியாக இது போன்ற செயல்களில் ஈடுபட்டால், இந்த சோகம் நடக்கும் என்று எச்சரித்துள்ளனர்.