நிர்பயாவுக்கு நேர்ந்த அதே கொடுமை– இரும்பு கம்பியால் பெண்ணின் பிறப்புறுப்பை சேதப்படுத்திய காமக் கொடூரன்
டெல்லியில் நிர்பயாவுக்கு நேர்ந்த அதே கொடுமை மும்பையிலும் ஒரு பெண்ணிற்கு நேர்ந்துள்ளது. வாகனத்தில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்து, பின்னர் இரும்பு கம்பியால் அந்தப் பெண்ணின் பிறப்புறுப்பை சேதப்படுத்தி இருக்கிறான் கொடூரக்காரன்.
டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவம் பயின்ற மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் ஓடும் தனியார் பேருந்துக்குள் வைத்து பாலியல் வன்புணர்வு செய்து கடுமையாக தாக்கப்பட்டதில், அம்மாணவியின் பிறப்புறுப்பில் இரும்புக் கம்பியை கொண்டு கொடூரமாக சிதைக்கப்பட்டதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
டெல்லியில் நிர்பயாவுக்கு நேர்ந்த கதியை போலவே மும்பையிலும் ஒரு பெண்ணுக்கு நேர்ந்துள்ளது. மும்பை கைராணி சாலையில் நிர்வாண கோலத்தில் நிற்கும் ஒரு இளம்பெண்ணை ஆண் ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டிருக்கிறார் என்று போலீசாருக்கு தகவல் சென்றது. உடனே அந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சம்பவ இடத்தில் இளம்பெண் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு ராஜா வாடி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அப்பெண்ணுக்கு 34 வயது என்றும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என்றும், இரும்பு கம்பியால் அவரது பிறப்புறுப்பு சேதப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். இந்த குற்றத்தை செய்த குற்றவாளியை போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விரைந்து தேடினார்கள்.
தீவிர தேடுதலில் மோகன் சவுகான் என்பவரை போலீசார் பிடித்தனர். அவன் மீது கொலை முயற்சி வழக்கு, பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தின்போது அவன் பயன்படுத்திய டெம்போவை போலீசார் கைப்பற்றியுள்ளனர். வேனில் ரத்த கரைகள் இன்னும் உள்ளது.
தடயவியல் நிபுணர்கள் அந்த வேனை ஆய்வு செய்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட அந்த பெண் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

