சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.1.50 லட்சம் - எடுத்து உரியவரிடம் ஒப்படைத்தவருக்கு குவியும் பாராட்டு
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்வம் (50) இவர், அப்பகுதியில் பனியன் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், இவர் நேற்று காலை அவரது நண்பர் ராஜமாணிக்கம் என்பவருடன், சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, சாலையில் சிறிய பை ஒன்று இருந்தைப் பார்த்தார். அந்த கைப்பையை எடுத்து திறந்து பார்த்தபோது அதில், ரூ.1,50,000 பணம் இருந்தது. உடனடியாக அந்த பணத்தை திருப்பூர் வடக்கு காவல்நிலையத்துக்கு கொண்டு சென்று இன்ஸ்பெக்டரிடம் கொடுத்துள்ளார் செல்வம். இந்த காலத்தில் இப்படியும் ஒரு மனிதரா என வியந்து அவரின் நேர்மையை காவல்நிலையத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளும் பாராட்டினார்கள்.
இந்நிலையில், பணத்தை தவற விட்டு சென்ற உரிமையாளர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ரூ.1.50 லட்சம் ரூபாய் தவறியதாக கருவம்பாளையத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் காவல்நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார். அப்போது போலீசார் அவரிடம் விசாரித்த போது, கண்டெடுக்கப்பட்ட பணம் விஜயகுமாருடையது என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, அந்தப் பணத்தை உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர். சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.1.50 லட்சம் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த செல்வத்திற்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.
