பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்!
பட்டிமன்றங்களின் மூலம் உலகெங்கும் வாழும் தமிழர்களின் மனங்களைக் கவர்ந்த புகழ்பெற்ற தமிழறிஞரும், பேராசிரியரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா (90), வயது முதிர்வு காரணமாக இன்று (11.09.2026) மதுரையில் காலமானார்.
சாலமன் பாப்பையா
மதுரையைச் சேர்ந்த இவர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியதுடன், பட்டிமன்றப் பேச்சாளர், எழுத்தாளர், பதிப்பாசிரியர், நடிகர் எனப் பன்முகத் திறமையுடன் விளங்கினார்.

கம்பீரமான குரல், நகைச்சுவை கலந்த பேச்சு மற்றும் எளிமையான இனிய தமிழ் மூலம் உலகத் தமிழர்களின் அன்பைப் பெற்ற இவர், இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளிலும் பட்டிமன்றங்களை நடத்தி தமிழ் மொழியின் சிறப்பையும் நகைச்சுவையையும் உலகெங்கும் கொண்டு சேர்த்தார்.

சிவாஜி, பாய்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழுக்குச் செய்த சிறப்பான சேவையைப் பாராட்டி தமிழக அரசு 2000ஆம் ஆண்டு கலைமாமணி விருதும், இந்திய அரசு 2021ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் வழங்கி கௌரவித்தது.
அவரது மறைவு தமிழ் உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது நகைச்சுவை நிறைந்த பேச்சும், நயமான பட்டிமன்றத் தீர்ப்புகளும் என்றும் தமிழ் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |