மீன் இல்லாமல் சைவ மீன் குழம்பு செய்யலாம்!! வாழ்நாளில் சுவை மறக்காது
சைவ மீன் குழம்பு சாப்பிட்டதுண்டா? அதென்ன சை மீன் குழம்பு என்றால் என்று யோசிக்கிறீர்களா?
இந்தக் குறிப்பில் அதை தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
வாழைக்காய் - 3
மிளகாய் தூள் - 4 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
சோம்புத்தூள் - 2 மேசைக்கரண்டி
மல்லித்தூள் - 4 மேசைக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, வெள்ளைப் பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவையான அளவு
புளி - எலுமிச்சம் பழ அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் வாழைக்காயின் தோலை நீக்கவும். தோல் நீக்கிய வாழைக்காயை குறுக்காக வெட்டிக் கொள்ளவும்.
வெட்டிய வாழைக்காயின் நடுவில் சிறியதொரு துவாரத்தைப் போட்டுக் கொள்ளவும். வெட்டிய வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு பௌலில் ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி உப்பு, அரை தேக்கரண்டி எண்ணெய், 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சேர்த்தவற்றை எல்லாம் நன்றாக கலந்துகொள்ள வேண்டும். பின்னர் வெட்டி வைத்துள்ள வாழைக்காய்களை இந்த மசாலாவில் போட்டு பிரட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, மசாலா தடவி வைத்துள்ள வாழைக்காய்களை அதில் போட்டு இரு பக்கமும் பொன்னிறமாக வரும் வரையில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் இன்னொரு கடாய் எடுத்து, அதில் எண்ணெய் சேர்த்து, 1 தேக்கரண்டி கடுகு, கால் தேக்கரண்டி வெந்தயம், 1 கொத்து கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ள வேண்டும். கறிவேப்பிலை நன்றாக பொரிந்ததும் சிறிதாக நறுக்கிய இரண்டு வெங்காயத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
1 தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும். கலவை ஓரளவு வதங்கியதன் பின்னர் அதனுடன் இஞ்சி, வெள்ளைப்பூண்டு விழுது சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இஞ்சி, வெள்ளைப் பூண்டின் பச்சை வாசம் போனதும் மிக்சியில் நன்றாக அரைத்து வைத்துள்ள தக்காளியை அதனுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தக்காளியின் பச்சை வாசனை போனதும் 1 1/2 மேசைக்கரண்டி மிளகாய் தூள், 3 1/2 மேசைக்கரண்டி மல்லித்தூள், 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி சீரகத்தூள், 1 தேக்கரண்டி சோம்புத்தூள் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ள வேண்டும்.
அனைத்தும் நன்றாக வதங்கியதன் பின்னர் புளித் தண்ணீரை சேர்த்துக்கொள்ள வேண்டும். அனைத்தையும் நன்றாகக் கலந்து கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும்போது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்துகொள்ள வேண்டும்.
உப்பை சரிபார்த்துக் கொள்ளவேண்டும். குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்துவரும் போது பச்சை மிளகாய், கறிவேப்பிலை என்பவற்றை சேர்த்து நன்றாகக் கலந்து 5 நிமிடங்கள் அப்படியே மூடி விடவேண்டும்.
பின்னர் வாழைக்காயை அதில் சேர்க்க வேண்டும். அதை மூடி இரண்டு நிமிடம் வேகவைத்தால் போதும். அருமையான சைவ மீன் குழம்பு ரெடி.