Coca Cola யை ஓரங்கட்டிய ரொனால்டோ! அந்த விளம்பரத்தில் நடித்துள்ளது தெரியுமா?
போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த உலகின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரராகத் திகழும் கிறிஸ்டியனோ ரொனால்டோ, நடைபெற்று வரும் UEFA EURO 2020 தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.
குரூப் F பிரிவில் ஹங்கேரி அணிக்கெதிரான ஆட்டத்துக்கு முன்னதாக வழக்கமான செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோ கலந்து கொண்டு செய்தியாளர்களைச் சந்திப்பதற்காக மேடையில் அமர்ந்தார்.
அப்போது அவரின் எதிரில் மேஜை மீது இரண்டு கோகோ கோலா பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனைப் பார்த்த ரொனால்டோ, கோலா பாட்டில்கள் இரண்டையும் அப்புறப்படுத்தி விட்டு பக்கத்திலிருந்த தண்ணீர் பாட்டிலை மேலே உயர்த்திக் காட்டினார்.
‘அகுவா’ என தண்ணீருக்கான போர்த்துகீசிய வார்த்தையைக் கூறிய அவர், எல்லோரும் கோலாவுக்கு பதிலாகத் தண்ணீர் குடிக்க வேண்டுமெனச் சமிக்ஞை செய்தார். ரொனால்டோவின் இந்த செயல் உலகம் முழுவதும் வைரலானது.
கோடிக்கணக்கானவர்கள் ரொனால்டோவின் இந்த வீடியோவை பகிர்ந்தனர். இந்த விவகாரம் அதோடு நிற்காமல் கோகோ கோலாவின் பங்கு வர்த்தகத்திலும் கடுமையாக எதிரொலித்தது.
இந்நிலையில் ரொனால்டோ 2006ம் ஆண்டு நடித்துள்ள Coca Cola விளம்பரம் வைரலாகி வருகிறது.
ரொனால்டோவுக்கு ஆதரவாக கருத்துகள் பகிரப்பட்டாலும், விளம்பரத்தில் நடித்தது தொடர்பாகவும் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.