தனிமையில் அமர்ந்திருந்த அஸ்வின்... குவியும் ரசிகர்களின் ஆதரவு; அணியில் வாய்ப்பு கிடைக்காதது ஏன்?
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் 4வது டெஸ்ட், லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டிக்கான டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்தியாவை பேட்டிங் செய்யச் சொன்னது.
இதைத் தொடர்ந்து விளையாடிய இந்தியா, முதல் இன்னிங்ஸில் 191 அடுத்து, இங்கிலாந்து அணி 290 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 99 ரன்கள் பின்னிலையில் இந்திய அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்கம் முதலே இந்தியனின் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினர்.
இதன்பின்னர், இந்திய அணி 466 ரன்கள் குவித்தது. 368 ரன்கள் அடித்தால் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. விக்கெட் இழப்பின்றி ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடங்கியது இங்கிலாந்து. இதில், இங்கிலாந்து அணி 210 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் 4 வது டெஸ்டில் வெற்றி பெற்றது.
இந்த கொண்டாட்டத்தை இந்திய அணி கொண்டாடி வந்தாலும், ஒரு பக்கம் 4-வது டெஸ்ட் போட்டியைப் பார்வையாளர்கள் மாடத்தில் தனி ஆளாக அமர்ந்து பார்த்த ரவிச்சந்திரன் அஸ்வினின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
அதில், சோகத்துடன் தனி ஆளாக அமர்ந்து போட்டியைப் பார்த்த அஸ்வினுக்கு நெட்டிசன்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் தொடர்ந்து 4 போட்டிகளாக அஸ்வினை ஓரம் கட்டிய கேப்டன் கோலியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
உலக டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 2 பந்துவீச்சாளராக அஸ்வின் இருந்தும் அவரை ப்ளேயிங் லெவனில் சேர்க்காமல் கோலி தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். ஆனால், ஜடேஜாவுக்கு மட்டும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
மேலும், 4-வது டெஸ்ட் போட்டி நடந்து வரும் இதே ஓவல் மைதானத்தில் சர்ரே அணிக்காக கவுண்டி அணியில் விளையாடிய அஸ்வின், சோமர்செட் அணிக்காக 27 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதையும் மறுக்க முடியுமா?
4 வேகப்பந்துவீச்சாளர்கள், ஒரு சுழற்பந்துவீச்சாளர் என்ற கூட்டணியிலேயே தொடர்ந்து கோலியின் திட்டம் நகர்ந்து வருகிறது. அடுத்ததாக மான்செஸ்டரில் நடக்கும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா எனத் தெரியவில்லை.
