இருமலை ஓட ஓட துரத்தும் சக்திவாய்ந்த மிளகு ரசம்!
இருமலை கட்டுப்படுத்த மிளகு ரசம் அற்புதமான மருந்து.
ரசத்தில் நாம் மிளகு சேர்ப்பதால், இருமல், தலை சுற்றல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கின்றது.
அதோடு சுவாசப் பிரச்சினைகளுக்கு மிளகு ஒரு சிறந்த மூலிகை.
10 மிளகு இருந்தால் பகைவர் வீட்டிலும் அமர்ந்து உணவு அருந்தலாம்.
உங்களுக்கு மிளகு ரசம் எப்படி செய்வதென்று தெரியாவிட்டால் இதோ அருமையான ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது.
அதைப் படித்து ஒரு முறை செய்து ருசியுங்கள்.
தேவையான பொருட்கள்
- புளி - 1 எலுமிச்சை அளவு
- கொத்தமல்லி - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- மிளகு - 1 டீஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- பூண்டு - 1
- வரமிளகாய் - 1
- துவரம் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
- நெய் - 1 டீஸ்பூன்
- எண்ணெய் - 1 டீஸ்பூன்
- கடுகு - 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிது
- பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
- வரமிளகாய் - 2
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தினை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்குங்கள்.
பிறகு நன்றாக பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் புளியை 1 கப் நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து, பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும்.
பின்பு அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி கொதிக்க விட வேண்டும்.
அதே சமயம் மற்றொரு அடுப்பில் சிறு பாத்திரத்தினை வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் தாளித்ததை கொதிக்கும் ரசத்தில் ஊற்றி மீண்டும் ஒரு கொதி விட்டு, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், மிளகு ரசம் ரெடி!!!