அலகு குத்திய பெண்ணுக்கு சாம்பிராணி தூபம் போட்ட இஸ்லாமியர்!
ராமநாதபுரம் முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவில், அலகு குத்தி வந்த பக்தர்களை இஸ்லாமிய ஒருவர் வரவேற்ற காட்சி இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பங்குனி உத்திர திருவிழா
ராமநாதபுரம் ஸ்ரீவழிவிடு முருகன் கோயிலின் 83 வது ஆண்டு பங்குனி உத்திர பெருவிழா நடைபெற்று வருகிறது. இக்கோவிலில் கடந்த மதம் 28-ம் தேதி கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. 10 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சி நாளையோடு முடிவடைய உள்ளது.
ராமநாதபுரம் சுற்றுவட்டார கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து காப்பு கட்டியும், பால்குடம் எடுத்தும், வேல் காவடி, மயில் காவடி ஆகியவை எடுத்து வந்தும் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களை வரவேற்ற இஸ்லாமியர்
அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்த வந்த பெண்ணுக்கு, இஸ்லாமியர் ஒருவர் சாம்பிராணி போட்ட நிகழ்வு அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அந்த இஸ்லாமியர் சாம்பிராணி போட்டு மந்திரங்களை சொல்ல சொல்ல, அலகு குத்திய பெண் பக்தியின் உச்சத்திற்கு சென்று சாமி வந்து ஆடவும் செய்தனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் மதங்களை கடந்து, எல்லோரும் ஒன்று தான், எல்லா கடவுள்களும் ஒன்றுதான் என்பது போல் இந்நிகழ்வு உள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.