முகம் வீங்கியதற்கு இவர் தான் காரணம்.. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு ரைசா கொடுத்த புகார்!
தவறான முகப்பொலிவு சிகிச்சையால், நடிகை ரைசாவின் முகம் வீங்கியது. இதற்கு ரைசா தரப்பில் இருந்து ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் மாடல் ரைசா வில்சன். அதன்பிறகு, பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்தப் படம் வெற்றியடைந்ததால், அடுத்தடுத்த வாய்ப்புகளும் ரைசாவிற்கு கிடைத்தன.
அந்தவகையில், காதலிக்க யாருமில்லை, தி சேஸ் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துவருகிறார். இதையடுத்து, தன் அழகை பராமரிப்பதிலும் மிகவும் கவனமாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் ரைசா வில்சன், முகப்பொலிவு சிகிச்சைக்காக சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள பீஹென்ஸ்ட் என்ற சிகிச்சை மையத்தை அணுகியுள்ளார்.
அங்கிருந்த, மருத்துவர் பைரவி செந்திலின் உத்தரவாதத்தின் அடிப்படையில் மார்ச் 25ஆம் தேதி மருத்துவர் வனிதா என்பவரும், மணி என்ற மற்றொரு நபர் ஆகியோர் மூலம் போடாக்ஸ் சிகிச்சையை ரைசா எடுத்துக்கொண்டு, அதற்கு கட்டணமாக 62 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தியுள்ளைதை வழக்கறிஞர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்பின்னர், ஏப்ரல் 16ஆம் தேதி ஆலோசனைக்கு பிறகு ஏப்ரல் 17ஆம் தேதியே டியர் ஃப்ரீ ஃபில்லர் சிகிச்சையை மருத்துவர் பைரவி செந்திலே அளித்ததுடன், அதற்காக 65 ஆயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்தியுள்ளார்.
சிகிச்சைக்கு பின்னர் ரைசாவின் வலது கண் மற்றும் கன்னத்திலிருந்து ரத்தக்கசிவு ஏற்பட்டதுடன், முகமும் வீங்கியதாகவும், இதற்கு மருத்துவர் பைரவி செந்தில் அளித்த தவறான சிகிச்சையே என ரைசா குற்றம்சாட்டி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது சம்பந்தமான புகைப்படத்தையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட ரைசா அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார். மேலும், ரைசா கேட்ட சிறிய அளவிலான சிகிச்சைக்கு மாறாக வலுக்கட்டாயமாக வேறு சிகிச்சை அளித்ததால்தான் தனது முகம் பாதிப்புக்கு உள்ளானதாக வேதனை தெரிவித்துள்ளார்.
மருத்துவர் பைரவியிடம் விளக்கம் பெற ரைசா முயன்றும், சந்திக்க மறுத்துவிட்டதாகவும் நோட்டீசில் சுட்டிக்காட்டியுள்ளார்.
15 நாட்களுக்குள் இழப்பீட்டுத் தொகையை கொடுக்காவிட்டால் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் மூலம் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற வேண்டியிருக்கும் என மருத்துவர் பைரவி செந்திலை வழக்கறிஞர் ஜி.ஹரிஹர அருண் சோமசங்கர் அனுப்பிய நோட்டீசில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ரைசாவின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த மருத்துவர் பைரவி செந்தில், இருப்பக்கமும் சீரான அளவில் இல்லாத முக அமைப்பை, சீர் செய்யும் dermal fillers சிகிச்சையே ரைசாவிற்கு அளிக்கப்பட்டது.
இதுபோன்ற, சிகிச்சையை ஏற்கெனவே ஒரு முறை ரைசா எடுத்துக் கொண்டார். அதனைத்தொடர்ந்து தற்போது அதே சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சையால் ஒருவாரத்திற்கு முகம் வீக்கமாகவே இருக்கும். ஆனால், ரைசா முகம் வீங்கியதால் என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார் என்றார்.