போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி! மீண்டும் சிக்கிய நடிகைகள் ராகிணி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி
கடந்த 2020-ம் ஆண்டு, பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவமானது இந்திய திரையுலகை உலுக்கியது. இதையடுத்து அவர் போதைப் பொருள் பயன்படுத்தியதாக சர்ச்சை எழுந்தது.
எனவே, இந்தியா முழுவதும் போதை பொருட்கள் பயன்படுத்தும் நடிகர், நடிகைகளை கையும் களவுமாக பிடிக்கும் வேலையில் போலீசார் இறங்கினர்.
இதில், நடிகை நிக்கி கல்ராணியின் தங்கை சஞ்சனா கல்ராணி மற்றும் ராகினி திவேதி உள்ளிட்ட பலரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் பல முறை ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தும் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.
மேலும், அவர்கள் போதை பொருள் பயன்படுத்தியதை நிரூபிக்கும் வேலையில் போலீசார் இறங்கினர். இதனிடையே, அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தினார்களா என்பதை கண்டறிய, அவர்களது தலைமுடி மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
நடிகைகளின் தலைமுடி மாதிரியை ஆய்வு செய்ததில் அவர்கள் இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் இந்த வழக்கில் அவர்கள் இருவர் மீதும் அடுத்தக்கட்ட நடவடிக்கை விரைவில் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பொதுவாக போதைப் பொருள் பயன்படுத்தியவர்களின் சிறுநீர் அல்லது ரத்த மாதிரிகளை 24 மணிநேரத்திற்குள் சோதனை செய்தால் மட்டுமே அவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தி இருந்தால் தெரிய வருமாம்.
மேலும், இதுவரை போதைப் பொருள் வழக்கில் சிக்கிய பலருக்கும் இந்த இரு சோதனைகள் மட்டுமே செய்யப்பட்டு வருவது வழக்கம். ஆனால், அதை தாண்டி FSL எனும் சோதனையின் மூலம் இந்த இரு நடிகைகளும் தற்போது சிக்கி உள்ளனர்.