கால்சியம் குறைப்பாடு இருக்கா? அப்போ இந்த மா உருண்டை சாப்பிடுங்க
பொதுவாக குழந்தைகளின் ஆரோக்கியம் விடயத்தில் தாய்மார்கள் அதிக கவனம் செலுத்துக் கொள்ள வேண்டும். அவர்களின் உடலின் வளர்ச்சிக்கு உதவும் உணவுகளை அடிக்கடி கொடுக்க வேண்டும்.
அதிலும் குறிப்பாக குழந்தைகள் குடிக்க மறுக்கும் பாலில் ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன. இது அவர்களின் வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அதே போன்று ராகியில் ஏகப்பட்ட சத்துக்கள் இருந்தாலும் கால்சியம் அதிகமாக உள்ளது. இது குழந்தைகளின் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருக்கும். ராகியை வைத்து கஞ்சி, புட்டு போன்ற உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.
இவற்றையெல்லாம் விட ராகியில் உருண்டை செய்து தினமும் காலையில் சாப்பிடக் கொடுக்கலாம். இதிலுள்ள சத்துக்கள் குழந்தையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
கடைகளில் விற்பனை செய்யப்படும் ஆரோக்கியமற்ற உணவுகளை விட இந்த உருண்டை ஆரோக்கியமான ஸ்நாக்ஸாக உள்ளது.
அந்த வகையில், ராகி உருண்டை எப்படி இலகுவாக செய்யலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- நெய் - 1 டேபிள் ஸ்பூன்
- ராகி மாவு - 1 கப் அளவு
- பச்சை வேர்க்கடலை - 1/2 கப் அளவு
- ஏலக்காய் - 1
- நாட்டுச்சர்க்கரை - 3/4 கப் அளவு
- முந்திரி - தேவையான அளவு (நறுக்கியது)
உருண்டை செய்வது எப்படி?
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் கொஞ்சமாக நெய் விட்டு, சூடாகும் பொழுது ராகி மாவை போட்டு மிதமான தீயில் வறுத்து ஒரு தட்டில் கொட்டி குளிர வைக்கவும்.
அதன் பின்னர், அதே வாணலியில் வேர்கடலையை போட்டு வறுத்தெடுக்கவும். அடுத்து வேர்கடலையை குளிர வைத்து, மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைக்கவும். அதனுடன் 1 ஏலக்காய் சேர்த்துக் கொள்ளலாம்.
வறுத்து பவுடர் செய்து வைத்திருக்கும் வேர்க்கடலையுடன் நாட்டுச்சர்க்கரையையும் சேர்த்து அரைக்கலாம். இவை அனைத்தையும் ஒரு தட்டில் கொட்டு, நறுக்கி வைத்திருக்கும் முந்திரியையும் சேர்த்து உருண்டைகளாக உருட்டி எடுக்கவும்.
இந்த உருண்டையை குழந்தைகளுக்கு தினமும் சாப்பிடுவதற்கு கொடுக்கலாம். இதிலுள்ள கால்சியம் சத்து எலும்பு, நகம்,கண், தலைமுடி வளர்ச்சி, பற்களின் வளர்ச்சி உள்ளிட்ட அனைத்திற்கு உதவியாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |