தரமான சானிடைசரை கண்டுப்பிடிப்பது எப்படி? போலியால் இவ்வளவு பக்க விளைவா?
கொரோனா வைரஸ் இருந்து நம்மளை தற்காத்துக்கொள்ள முகக்கவசம் அணிவது, சமூக விலகலை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சுத்தம் வேண்டும் என மக்களுக்கு சுகாதாரத்துறை மட்டுமின்றி அரசும் அறிவுறுத்தி வருகிறார்கள். குறிப்பாக, சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளும், மருத்துவ நிபுணர்களும் கேட்டுக்கொண்டனர்.
இதனால், சானிடைசர் பயன்பாடு மக்களின் வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்ட நிலையில், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் மக்களுக்கு மேலும் சிக்கலை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், நல்ல சானிடைசரை எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம். நல்ல சானிடைசர் என்றால் குறைந்தபட்சம் 60 சதவீத எத்தில் ஆல்கஹால் அல்லது 70 சதவீத ஐசோபுரொப்பைல் ஆல்கஹால் கொண்டதாக இருக்க வேண்டும்.
அத்துடன் வடிகட்டிய தண்ணீர், ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் கிளிசரின் போன்ற அங்கீரிக்கப்பட்ட பொருட்கள் அடங்கி இருக்க வேண்டும். இந்த மூலப்பொருட்களை உள்ளடக்கிய சானிடைசரில் மக்கள் கை கழுவும்போது வைரஸ்களிடம் இருந்தும் தற்காத்துக்கொள்வதுடன், பக்கவிளைவுகளும் ஏற்படாது.
ஆனால், சந்தையில் சானிடைசருக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டை பயன்படுத்தி பல்வேறு நிறுவனங்களும் சானிடைசர் உற்பத்தியில் ஈடுபட்டனர். சில போலி நிறுவனங்கள் தயாரித்த சானிடைசரை பயன்படுத்தி மக்களுக்கு தோல் அரிப்பு, ஒவ்வாமை மற்றும் இதயம், கல்லீரல் பாதிப்புகளையும் எதிர்கொண்டுள்ளனர்.
அதிலும், குறிப்பாக மெத்தனால் அல்லது 1-புரொப்பனால் அடங்கிய சானிடைசர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும். இவை நச்சுத்தன்மை வாய்ந்தவை என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். இதைப்போல ஆல்கஹாலுக்கு பதிலாக பென்சல்கோனியம் குளோரைடு கலந்த சானிடைசர்களுக்கு பாக்டீரியா மற்றும் வைரஸ்களை கொல்லும் திறன் குறைவு என்பதால் அவற்றை வாங்க வேண்டாம் எனக்கூறியுள்ள மருத்துவ நிபுணர்கள். மக்கள் சொந்தமாக வீடுகளில் சானிடைசர்கள் தயாரிக்கக்கூடாது எனவும் எச்சரித்து உள்ளனர்.
ஏனெனில் வேதிப்பொருட்களின் தவறான சேர்க்கையால் தோலுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும் என அவர்கள் கூறியுள்ளனர். உலக சுகாதார நிறுவனத்தின்படி, சானிடைசரில் pH அளவு 6 - 8 ஆகியவற்றுக்கு இடையே இருக்க வேண்டும் எனவும், நுண்ணுயிரிகள் அழிப்புத் திறன் சுமார் 99.9 சதவீதம் இருக்க வேண்டும் என கூறியுள்ளது.
மேலும், சானிடைசர் வாங்கும்போது மூலப் பொருட்கள் குறித்து லேபிளில் தகவல்கள் இருக்கும் சானிடைசரை மட்டுமே வாங்க வேண்டும் என்றும், அதிலும் மேற்குறிப்பிட்ட அளவில் மூலப்பொருட்கள் இருக்கின்றனவா? என்பதையும் நுகர்வோர் கவனமுடன் பார்த்து வாங்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனையடுத்து, போலி சானிடைசரை பயன்படுத்தினால் தலைவலி, காய்ச்சல், சளி உள்ளிட்ட நோய்களால் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பின்னர் சானிடைசரின் காலாவதி தேதியையும் கவனிக்க வேண்டும் என மக்களுக்கு நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.