குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் மீண்டும் கர்ப்பம்- சிகிச்சையில் பரிதாபமாக உயிரிழப்பு!
குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் மீண்டும் கர்ப்பமடைந்து சிகிச்சையின் போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சியைச் சேர்ந்தவர் வீரன். இவரது இரண்டாவது மகள் ராணி. ராணிக்கும், கோவையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இதையடுத்து, இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். கடந்த 2018-ல் தான் இவர்களுக்குப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
ஏற்கெனவே ஒரு மகள் உள்ள நிலையில், அப்போது மகனும் பிறந்ததால், குடும்பக் கட்டுப்பாடு செய்யச் சம்மதித்ததன் பேரில் குடும்பக்கட்டுப்பாடு செய்யப்பட்டது.
இதனிடையே புதுக்கோட்டைக்கு வந்திருந்த ராணிக்குக் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. மருத்துவமனையில் ராணி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அப்போது, மருத்துவர்கள் பரிசோதனையில் குடும்பக்கட்டுப்பாடு செய்த ராணிக்கு மீண்டும் கருத்தரித்து குழந்தை உருவாகி இருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும், உருவாகிய கருவை உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதற்கு, குழந்தையை அகற்றாமல் விட்டால், உயிருக்கு ஆபத்தாகிவிடுவோ என்று சம்மதம் தெரிவித்து அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
ஆனால், அறுவை சிகிச்சையின் போது ராணி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். 2018-ல் குடும்பக்கட்டுப்பாடு அலட்சியமாகச் செய்த மருத்துவக் குழு மீதும், தற்போது அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் உறவினர்கள் புகார் கொடுத்திருக்கின்றனர்.
இதுபற்றி மருத்துவமனை நிர்வாகம் அளித்த பதிலில், ராணிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது, ஆக்ஸிஜன், பிபி ரொம்பவே குறைய தொடங்கியிருக்கிறது. மருத்துவர்கள் ராணியைக் காப்பாற்ற எவ்வளவோ போராடிப் பார்த்திருக்கிறார்கள்.
முடியாமல் போனது. ஆனாலும், இதுகுறித்த விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.