வாடகை வீட்டில் கஷ்டப்படுறோம்.. எந்த வருமானமும் இல்லை! மதனின் மனைவி கதறல் பேட்டி
யூடியூப்பில் தகாத வீடியோக்கள் மூலம் இளைஞர்களை தவறான வழிக்கு தூண்டியதாக பப்ஜி மதன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 18ம் தேதி கைதான மதனை, காவலில் எடுத்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்த மதன், சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் அவரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதுடன், 2 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் இன்று மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது, ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்த மதனின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இவருடன் கைதாகி சிறையில் இருந்த மனைவி கிருத்திகாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மதனின் மனைவி கிருத்திகா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "கைது செய்யப்பட்ட எனது கணவர் மதன் மீது எதிர்மறையான கருத்துகள் பரவி வருகிறது. அதுகுறித்து விளக்கவே பேட்டியளிக்கிறேன்.
எனது கணவர் விளையாடியது கொரியன் வெர்ஷன். இந்தியாவில் சீன வெர்ஷன் மட்டுமே தடை செய்யப்பட்டிருந்தது.
மதன் மீது 200க்கும் மேற்பட்டோர் புகார் அளித்திருப்பதாக கூறுகிறார்கள், நாங்கள் விசாரித்ததில் 4 பேர் மட்டுமே புகார் அளித்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக மதன் எந்தவிதமான சொகுசு பங்களாக்களும் வாங்கவில்லை. இதுவரை
நாங்கள் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம். அந்த வீட்டின் சாவியும் தற்போது போலிஸாரிடம்தான் உள்ளது.
எங்களிடம் எந்த சொகுசு காரும் இல்லை. ஆடி ஏ6 கார் மட்டுமே எங்களிடம் உள்ளது.
எனது கணவர் மதன் ஒரு நாளில் 20 மணி நேரம் உழைத்து வீடியோ வெளியிட்டதன் மூலமாகவே சம்பாதித்தார், வேறு எந்த வருமானமும் எங்களுக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் தன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை சட்டரீதியாக சந்திக்க தயார் என்றும், தவறு செய்ததாக ஆதாரம் இருந்தால் போலிஸார் தங்களுக்கு தெரிவிக்குமாறும் தெரிவித்துள்ளார்.