PTSD Symptoms: மன ரீதியாக தாக்கும் PTSD என்றால் என்ன..? அதை எப்படி சமாளிப்பது?
பொதுவாக அதிர்ச்சிக்குப் பின்னரான மன அழுத்தப் பாதிப்பு அல்லது பேரதிர்ச்சிக்குப் பிறகான மன உளைச்சல் எனப்படுவது (post-traumatic stress disorder, PTSD) ஒரு உளவியல் சாந்த நோய்நிலை ஆகும்.
இது ஒருவருக்கு உள ரீதியாக அதிர்ச்சி ஏற்பட்ட பிறகு ஏற்படலாம், அதாவது பாலியல் வன்முறை, போர் நடவடிக்கை, சாலை விபத்துகள் அல்லது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பிற நிகழ்வுகள் போன்று ஏதாவது ஒரு வகையில் ஒருவர் மனதளவில் பாரிய பாதிப்னை சந்திப்பதன் விளைவாக இந்த நோய் நிலை ஏற்படலாம்.
PTSD என்றால் என்ன?
உடல் மற்றும் மன ரீதியாக மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவது தான் உளவியல் ரீதியாக Trauma என்று அறியப்படுகின்றது.Trauma வில் இருந்து வெளிவருவதற்கு சில வாரங்கள் முதல் சில மாதங்கள் வரையில் காலம் தேவைப்படலாம்.
குறிப்பாக விபத்தில் சிக்கிக் கொண்டு மீண்டு வருவது, அல்லது பெரிய விபத்தை நேரில் பார்ப்பது, நெருங்கியவர்களின் பிரிவு, இறப்பு, பொருளாதார ரீதியாக மிகப்பெரிய பின்னடைவு, நஷ்டம், கருச்சிதைவு ஆகியவை இத்தகையான மிகப்பெரிய பாதிப்பை உளவியல் ரீதியில் தோற்றுவிக்கும்.
அதன் பின்னர் குறித்த சம்பவம் தொடர்பாக ஏதேனும் ஒரு நிகழ்வை பார்த்து இருந்தாலோ அல்லது எதிர்கொண்டிருந்தாலும் அது மனரீதியான பிரச்சனைகளை உருவாக்குகிறது. இதை தான் போஸ்ட் ட்ரமாட்டிக் ஸ்ட்ரெஸ் டிசார்டர் PTSD என்று குறிப்பிடுகின்றோம்.
ஒவ்வொருவருக்கும் வாழ்வில் பல்வேறு வருத்தமளிக்கும் அல்லது புண்படுத்தும் அனுபவங்கள் ஏதோ ஒரு வகையில் நடந்திருக்கும்.
அவ்வாறான சம்பவங்களில் வருத்தமளிக்கும் மற்றும் தீங்கு விளைவிக்கும் அனுபவங்கள் இருக்கலாம். அவற்றுள் தற்காலிகமாக மன உளைச்சலை ஏற்படுத்தும் நிகழ்வுகளுக்கும் அதிர்ச்சிகரமான நிகழ்வுகளுக்கும் வித்தியாசம் காணப்படுகின்றது.
அதிர்ச்சி என்பது ஒரு நபர் தீங்கு விளைவிப்பதாகவோ அல்லது அச்சுறுத்துவதாகவோ குறித்த நபரின் நல்வாழ்வில் நீண்டகால விளைவைக் ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதால் ஏற்படலாம்.
அல்லது இயற்கை சீற்றங்களால் ஏற்பட்ட அழிவு, விபத்து போன்றவற்றை கடந்து வந்த ஒருவருக்கு ஏற்படலாம். அதுமட்டடுமன்றி சிறு வயதில் பாலியல் ரீதியில் அச்சுறுத்தல்களை அனுபவிப்பதால் கூட ஏற்படகூடும். இது தான் அதிர்ச்சி என்று அறியப்படுகின்றது.
PTSD தேசிய மையத்தின் அறிக்கையின் பிரகாரம் 60% ஆண்களும் 50% பெண்களும் தங்கள் வாழ்வின் ஒரு கட்டத்தில் ஒரு அதிர்ச்சிகரமான நிகழ்வை அனுபவிக்கின்றார்கள் என்று குறிப்பிடுகின்றது.
இவ்வாறான அதிர்ச்சி அனுபவங்கள் பெரும்பாலும் உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான எதிர்விளைவுகளை தோற்றுவிக்கின்றன.
அவை நிகழ்வுக்குப் பிறகும் பல ஆண்டுகள் வரையில் உளவியல் ரீதியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதிர்ச்சியின் விளைவுகள் ஒரு நபரின் உறவுகள், வேலை, ஆரோக்கியம் மற்றும் மனநலம் என வாழ்க்கையின் ஒட்டுமொத்த பகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
அறிகுறிகள் எப்படி இருக்கும்?
ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்திற்குப் பின்னர் அடிக்கடி இனம் புரியாத பயம் ஏற்படுவது. உதவியற்ற தன்மை மற்றும் தீவிர பயம் ஆகியவற்றை உணர்வது.
அதீத மன அழுத்தத்தைக் கையாள்வது மனச்சோர்வு அல்லது பதட்டம் போன்ற உணர்வுகள் அடிக்கடி தோன்றுவது.
அந்த நிகழ்வைப்பற்றிய தேவையில்லாத நினைவுகள் திரும்பத் திரும்ப வருதல். இவற்றை ஊடுருவும் எண்ணங்கள் மனதில் காட்சியாக மீண்டும் மீண்டும் தோன்றுவது.
அந்த நிகழ்வுடன் தொடர்புடைய துன்பம் தரும் கனவுகள் அல்லது கெட்ட கனவுகள் தோன்றி தூக்கத்தை சீர்குலைத்தல்.
அதிர்ச்சி தரும் அந்த நிகழ்வு மீண்டும் நடப்பதுபோல் உணர்தல் அல்லது மகிழ்சியாக இருக்கும் போதும் கூட குறித்த அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் நினைவிற்கு வந்தால் நிகழ்காலத்தை மறந்து மீண்டும் எண்ணங்கள் கடந்த காலத்துக்கு செல்வது.
அந்த நிகழ்ச்சியை ஏதோ ஒருவிதத்தில் நினைவுபடுத்தும் பொருட்களைப் பார்க்கும்போது மிகுந்த துன்பம் மற்றும் உடல் சார்ந்த பரபரப்பை உணர்வது போன்ற அறிகுறிகள் PTSD பாதிப்பின் முக்கிய அறிகுறிகளாகும்.
குழந்தைகளுக்கு PTSD வருமா?
PTSD பிரச்சினை ஏற்படுவதற்கு வயது முக்கியம் கிடையாது.எந்த வயதிலும் வரலாம். PTSDன் அறிகுறிகளை பெரியவர்கள் உணர்வது போல் சிறியவர்களும் உணரக்கூடும்.
உதாரணமாக குழந்தைகளைப் பொறுத்தவரையில் அதிர்ச்சி சம்பவங்களின் பிரதிபலிப்பு அச்சுறுத்தும் கனவுகளாக வெளிப்படலாம்.
சில குழந்தைகள் விளையாடும்போது அந்த அதிர்ச்சி தரும் நிகழ்வை நடித்துப்பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வார்கள்.
உதாரணமாக சாலைப் போக்குவரத்து விபத்து ஒன்றை எதிர்கொண்ட ஒரு குழந்தை, பொம்மைக் கார்களைக் கொண்டு அந்த விபத்தை மீண்டும் நடித்துக் பார்க்கும் இது அந்த குழந்தையின் மனநிலையில் ஏற்பட்ட பாதிப்பின் விளைவாக தோன்றும்.
குழந்தைகள் வயிற்று வலி மற்றும் தலைவலி வருவதாக அடிக்கடி பெற்றோரிடம் சொல்வதும் PTSD இன் விளைவாகவே பார்க்கப்படுகின்றது.
அவ்வாறு பாதிக்கப்பட்ட குழந்தைகள் தாங்கள் நெடுநாள் வாழ்வோம், பெரியவர்களாக வளர்வோம் என்று நம்ப இயலாமல் துன்பத்தை அனுபவிக்கின்றார்கள்.
PTSDக்கான உளவியல் சிகிச்சைகள்
கடந்தகால நிகழ்வுகளை யாராலும் மாற்ற இயலாது என்றாலும், அந்த நிகழ்வைப்பற்றி, உலகைப்பற்றி, உங்கள் வாழ்க்கையைப்பற்றி நீங்கள் எதிர்மறையாக சிந்திப்பதை கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். உளவியல் ஆலோசகரின் உதவியை பெற்றுக்கொள்வதும் சிறந்தது.
அச்சம் மற்றும் துன்பத்தில் மூழ்காமல், நடந்தது என்ன என்பதை நினைவுகூர்தல். அது கடந்த காலம் என்பதை மனதுக்கு புரிய வைக்க வேண்டும். இதன் மூலம் நிகழ்காலத்தில் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ முயற்சிக்கலாம்.
என்ன நடந்தது என்பதைப்பற்றிப் நெருங்கியவர்களிடம் அல்லது உளவியல் ஆலோசகரிடம் பேசி, அதன்மூலம் உங்கள் மனம் நினைவுகளை வேறு இடத்தில் சேமிக்கும்படி செய்தல்.
உங்கள் உணர்வுகள் உங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ளன என்று உணர்வதற்கு உங்களுக்கு நீங்களே அடிக்கடி தெளிவுப்படுத்திக்கொள்ளலாம்.
செய்யும் வெலையில் முழு கவனத்தையும் வைத்திருத்தல், கவனத்தை சிதறவிடாமல் வைக்க தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளல்.
மனதுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் விடயங்களில் உங்களின் எண்ணங்களை திசைத்திருப்புவது போன்ற முயற்சிகள் PTSDக்கான சிறந்த உளவியல் சிகிச்சைகளாக பார்க்கப்டுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |