சப்பாத்திக்கு பக்காவாக பொருந்தும் உருளைக்கிழங்கு காளன் மசாலா... எப்படி செய்வது?
பொதுவாகவே அசைவ பிரியர்களும் விரும்பி சாப்பிடும் சைவ உணவுகளின் பட்டியலில் உருளைக்கிழங்கு மற்றும் காளான் நிச்சயம் இடம்பிடித்துவிடும்.
அதன் தனித்துவமான சுவையால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவராலும் விரும்பப்பட்டு வருகின்றது. இந்த இரண்டும் கலந்து ஒரு உணவு தயாரித்ததால் நிச்சயம் அதன் சுவை அசத்தலாக தான் இருக்கும்.
சற்று வித்தியாசமான முறையில் சப்பாத்தி மற்றும் சாதத்துக்கு பக்காவாக பொருந்தும் உருளைக்கிழங்கு காளான் மசாலாவை நாவூரும் சுவையில் எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
காளான் - 200 கிராம்
உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 2
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 2
தயிர் - 2 தே.கரண்டி
பூண்டு - 5 பல்
இஞ்சி - 1 துண்டு
சீரகம் - 1 தே.கரண்டி
வர மிளகாய் - 3
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மஞ்சள் - 1/2 தே.கரண்டி
மல்லித் தூள் - 1/2 தே.கரண்டி
மிளகாய்த் தூள் - 1/2 தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 1/2 கப்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
செய்முறை
முதலில் உருளைக் கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு, நீர் வெளியேறும் வரை வதக்கி தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
வெங்கயத்தை நான்கு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் 3 -4 நிமிடங்கள் கொதிக்கவிட்டு ஆறவிட வேண்டும். பின்னர் அதை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி, அதோடு பூண்டு ,சீரகம் மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றை போட்டு பேஸ்ட் பதத்துக்கு நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய விட்டு அதில் பெருங்காயத் தூள் மற்றும் நறுக்கிய இஞ்சி ஆகியவற்றை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அரைத்த வெங்காய விழுதைக் கொட்டி அடுப்பை மிதமான தீயில் வைத்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக கொதிக்க விட வேண்டும்.
பின்னர் அதனுடன் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, மிதமான தீயில் சிறிது நேரத்திற்குக் கொதிக்க விடவும்.
அதனையடுத்து பொடியாக நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், தயிர் ஆகியவற்றை சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி, இதை மூன்று தொடக்கம் நான்கு நிமிடங்கள் வரையில் நன்றாக கொதிக்கவிட வேண்டும்.
நன்றாக கொதித்ததும் நறுக்கி வைத்துள்ள காளான் துண்டுகளைச் சேர்த்து வதக்கி, பின்னர் வதக்கி வைத்திருந்த உருளைக் கிழங்குகளையும் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு வதக்கிக்கொள்ள வேண்டும்.
இறுதியாக கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் உருளைக்கிழங்கு காளான் மசாலா தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |