உதயநிதி ஸ்டாலின் வந்தால் தான் கீழே இறங்குவேன்: 200 அடி டவரில் நின்று பெண் தற்கொலை மிரட்டல்
பூந்தமல்லி மகளிர் பொலிஸ் நிலையத்தில் புகார் எடுக்க தாமதமானதால் டவரில் ஏறி பெண் தற்கொலை மிரட்டல் விடுத்தார், உதயநிதி ஸ்டாலின் வந்தால் தான் இறங்குவேன் என்று பிடிவாதம் செய்துள்ளது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும், கன்னியாகுமரியைச் சேர்ந்த ராஜூலா என்ற பெண்ணுக்கும், சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், திருவேற்காடு பகுதிக்கு வந்த ராஜூலா, கணவரிடம் தமது நகை மற்றும் பணத்தை திரும்ப கேட்ட நிலையில், மீண்டும் இருவருக்குள்ளும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, கணவர் மீது பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், புகார் அளிக்கச் சென்றுள்ளார். ஆனால், புகாரை வாங்க பொலிசார் தாமதப்படுத்தியதால், திடீரென அங்குள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி, ராஜூலா தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிசாரும், தீயணைப்பு வீரர்களும் அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வந்தால் தான் கீழே இறங்குவேன் என்று கூறி பிடிவாதம் பிடித்தார்.
மேலும், 3 மணி நேரத்திற்கும் மேலாக, செல்போன் கோபுரத்தின் மேலேயே இருந்த ராஜூலா கீழே இறங்கி வர மறுத்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் பூவை ரவிக்குமார், அந்த பெண்ணுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியும், உதயநிதி வீடியோ காலில் பேசுவதற்கு தயாராக இருப்பதாக கூறி அப்பெண்ணை கீழே இறங்கி வரவழைத்துள்ளனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
