செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு விடுவிக்கப்பட்ட எச்சரிக்கை... உஷார் மக்களே
தமிழகத்தில் கொரோனா 2வது அலை பரவி வரும் நிலையில், சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்று பாதிப்பால் பெண் சிங்கம் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதேபோல், ஐதராபாத், ஜெய்ப்பூர், இட்டாவா ஆகிய இடங்களில் உள்ள விலங்கியல் பூங்காக்களில் உள்ள சிங்கங்களும் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.
இதையடுத்து உயிரியல் பூங்காக்களில் உரிய முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இந்த நிலையில், சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்புதான் ஏற்பட்டதா என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது என்றும் கொரோனா தொற்று ஒரு விலங்கிலிருந்து மற்றொரு விலங்குக்கு எளிதாக பரவாது என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
செல்லப்பிராணிகள் மூலமாக அதிகளவில் கொரோனா பரவாது என்ற போதிலும், செல்லப்பிராணிகள் வளர்ப்போர், முன்னெச்சரிக்கையாக அவற்றிடமிருந்து உரிய இடைவெளியை கடைபிடிப்பது, பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவது நல்லது என குறிப்பிட்டுள்ளனர்.