15 வயது மாணவிக்கு காதல் வலை வீசி கடத்தி சென்ற நபர்!... ஏற்கனவே 2 பெண்களுடன் குடும்பம் நடத்தியது அம்பலம்
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்ற நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணகுடி அருகே உள்ள கலந்தபனை புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது26), கூலித்தொழிலாளியான இவருக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள் இருக்கின்றனர்.
இந்நிலையில் அடிக்கடி பணகுடி சென்று வந்த ஸ்டீபன், 10ம் வகுப்பு மாணவியுடன் பழகி வந்துள்ளார். ஒருகட்டத்தில், அந்த மாணவியை அழைத்து சென்று தலைமறைவாகியுள்ளார், மாணவி காணாமல் போனது தெரியவந்ததும் அவர் குடும்பத்தினர் தேடியபோது, ஸ்டீபன் அழைத்து சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து ஸ்டீபனை தேடி வந்தனர். அப்போது அவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு மாட்டுப்பண்ணையில் கூலி வேலை செய்து கொண்டு, அங்கேயே மாணவியுடன் தங்கி குடும்பம் நடத்துவதும் தெரியவந்தது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஸ்டீபனை கைது செய்தனர்.
10-ம் வகுப்பு மாணவியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 2 மனைவிகளுடன் குடும்பம் நடத்திய வாலிபர் 3-வதாக மாணவியை கடத்தி சென்றது மட்டுமல்லாமல், அவரது வீட்டருகே உள்ள மேலும் 2 இளம் பெண்களுக்கும் காதல் வலைவீசியதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.இதைத்தொடர்ந்து கைதான ஸ்டீபனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.