பல நோய்களை அண்டாமல் தடுக்கும் வேர்க்கடலை சாதம் தயார் செய்வது எப்படி?
உலகெங்கிலும் பல கோடி மக்கள் ஊட்டச்சத்து மிகுந்த ஒரு உணவான வேர்க்கடலையை அதிகம் உண்கின்றனர்.
தென் அமெரிக்க கண்டத்தை பூர்வீகமாகக் கொண்ட வேர்க்கடலை, வெப்பமண்டல நாடுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது.
புரதம், பாஸ்பரஸ், தையாமின், நையாசின் போன்ற சத்துக்கள் அதிகம் கொண்டது வேர்க்கடலை.
இதில் உள்ள எண்ணெய்ச் சத்து, எளிதில் ஜீரணமாகக்கூடியது. சிறந்த மலமிளக்கியாகவும் சருமத்துக்குப் பளபளப்பூட்டக்கூடியதாகவும் விளங்குகிறது.
இப்படி பல்வேறு நன்மைகளை கொண்ட வேர்க்கடலையை கொண்டு சுவையான சாதம் செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வேர்க்கடலை பொடி செய்ய தேவையானவை
வேர்க்கடலை- 1/2 கப்
எண்ணெய்- 1 டீஸ்பூன்
எள்ளு- 2 டீஸ்பூன்
கடலை பருப்பு- 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு- 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 4 அல்லது 5
துருவிய தேங்காய்- 3 டேபிள் ஸ்பூன்
மற்ற பொருட்கள்
சாதம்- 4 கப்
எண்ணெய்- 2 டீஸ்பூன்
கடுகு- 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை- சிறிதளவு
கருவேப்பிலை, உப்பு- தேவையான அளவு
செய்முறை
கடாயை முதலில் அடுப்பில் வைத்து வேர்க்கடலையை தனியாக வறுத்துக் வைத்துக் கொள்ளவும்.
பின்னர் கடாயை எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து வதக்கவும், நன்றாக பொரிந்து வந்ததும் எள்ளு சேர்த்துக் கொள்ளவும்.
இதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதங்கிய பின்னர் துருவி வைத்துள்ள தேங்காயை சேர்த்து வதக்கவும்.
இந்த கலவையை நன்றாக ஆறவிட்டு, ஏற்கனவே வறுத்து வைத்துள்ள வேர்க்கடலையுடன் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றியதும், கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து விட்டு கருவேப்பிலை சேர்க்கவும்.
இதனுடன் சிறிதளவு வேர்க்கடலை சேர்த்து வறுத்த பின்னர், சாதம், ஏற்கனவே அரைத்து வைத்துள்ள கலவையை போட்டு நன்றாக கிளறிவிட்டால் சுவையான வேர்க்கடலை சாதம் தயார்!!!