உங்கள் குழந்தைகளுக்கு சேமிப்பு ஆர்வத்தை தூண்ட வைப்பது எப்படி?
குழந்தைகளை பொதுவாக வளர்க்கும்போது அவர்களுக்கு பல நல்ல விஷயங்களை சிறுவயதிலேயே கற்றுக்கொடுக்கவேண்டும். மேலும், அவர்களுக்கு சிறுவயது இருந்தே சேமிப்பை கற்றுக்கொடுக்க வேண்டும்.
கடைக்குச் சென்றால், குழந்தை கேட்கிறது என்று கண்களில் பட்டதையெல்லாத்தையும் வாங்கக் கூடாது. ஒரு பொருளின் முக்கியத்துவத்தையும், அதன் அவசியத்தையும் பொறுமையாக உணர்த்த வேண்டும்.
அதன்பின் அந்தப் பொருள் அவசியமா இல்லையா என்பதைக் குழந்தைகளையே தீர்மானிக்கச் சொல்லுங்கள். பின்னர், சிறுசேமிப்பு பற்றி குழந்தைகளுக்குக் கதைகளாகவோ, அல்லது அவர்களுக்குப் புரியும் விதத்திலோ கூறி மனதில் ஆழப் பதியவையுங்கள்.
சேமிப்பு என்பது காசு பணம் சேமிப்பது மட்டுமல்ல. எந்தப் பொருளானாலும் தேவைக்கேற்ப மட்டும் பயன்படுத்துவதும் ஒரு வகை சேமிப்பே. இதையடுத்து, குழந்தைகளின் பிறந்தநாளில், அவர்களைப் பாராட்ட ஓர் உண்டியலைப் பரிசளியுங்கள்.
வீட்டில் எல்லோரின் பார்வையில் வைத்து தினமும் அதில் ஒரு குறிப்பிட்ட தொகையைப் போடப் பழக்குங்கள். பாக்கெட் மணி கலாசாரத்துக்குப் பதில், சேவிங்க்ஸ் மணி கலாச்சாரத்துக்குக் குழந்தையைப் பழக்குங்கள்.
அவர்களுக்குக் கிடைக்கும் தொகையை உண்டியலில் போட வேண்டும் எனச் சொல்லி, மாதம் ஒருமுறை சேமிக்க வையுங்கள். குழந்தைகள், மற்றவர்களுக்குப் பரிசு அளிக்க விரும்பினால், உண்டியலைப் பரிசளிக்க ஊக்கம் அளியுங்கள்.
இது, அவர்களின் மனதில் சேமிப்புக்கான முக்கியத்துவத்தை உணர வைக்கும் வருங்காலத்தில் அவர்கள் சேமிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்வார்கள்.