நடிகரின் மனைவி மரணத்துக்கு பேலியோ டயட் காரணமா? மருத்துவரின் விளக்கம்
தமிழ் சீரியல் நடிகர் பரத் கல்யாண் மனைவி ப்ரியாவின் திடீர் மரணத்திற்கு அவர் கடைபிடித்த பேலியோ டயட் தான் காரணம் என்ற செய்தி உலாவரத் தொடங்கிவிட்டது.
இதுகுறித்து சிவகங்கை பொதுநல மருத்துவரான டாக்டர்.அ.ப.ஃபரூக் அப்துல்லா அவருடைய பேஸ்புக் பக்கத்தில் அளித்துள்ள விளக்கம்,
"டயட்டால் ஏற்பட்ட சர்க்கரை நோய்" என்ற தலைப்பு இருப்பதால் அது என்ன டயட் என்று உள்ளே படிக்கும் போது பேலியோ டயட் என்று படிக்கும் போது உண்மையில் என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை ஊகிக்கத் தான் முடிகிறது.
இந்த விசயத்தில் வெறுமனே கணவரின் நண்பர் கூறியவற்றை வைத்து எப்படி கருத்து கூறமுடியும்?
காரணம் நிகழ்வில் நேரடி தொடர்புள்ள கணவர் விரிவாகக் கூறாமல் நாமும் கருத்து கூறுவது சிறந்ததாக இருக்காது.
எனினும் பேலியோ குறித்த சிறு விளக்கத்தைக் கூறினால் இறந்த சகோதரிக்கு பேலியோ உணவு முறையால் டயாபடிக் எனும் நீரிழிவு நோய் ஏற்பட்டிருக்காது என்பதை திடமாக உணர முடியும்.
பேலியோ என்பது குறை மாவு உணவு முறையின் பெயராகும்.
நாம் சாதாரணமாக அன்றாட உணவில் மாவுச்சத்து எனும் கார்போ ஹைட்ரேட்டை மிக அதிகமாக உட்கொண்டு வருகிறோம்.
சராசரியாக காலை முதல் இரவு வரை 300 முதல் 400 கிராம் மாவுச்சத்து சராசரி தமிழரால் உட்கொள்ளப்படுகிறது
கூடவே
உடல் உழைப்பின்மை
அதீத மன அழுத்தம்
உறக்கமின்மை
போன்றவயும் சேர்ந்து கொள்ள
நீரிழிவு ( டைப் டூ டயாபடிஸ்)
உடல் பருமன்
பிசிஓடி
ஃபேட்டி லிவர் போன்ற பிரச்சனைகள் தோன்றுகின்றன
இவற்றிற்கான முக்கிய காரணம் நமது உடலில் மாவுச்சத்து கிரகிக்கும் இயந்திரத்தில் ஏற்படும் கோளாறு என்றே கொள்ளலாம்
சரி இந்த வியாதிகளில் முக்கியமாக இருக்கும் டயாபடிஸுக்கு சிகிச்சையுடன் என்ன பரிந்துரைக்கப்படுகிறது?
மாவுச்சத்தை உண்பதை குறைக்க வேண்டும் என்பதே உணவு முறை சார்ந்த முதல் மாற்றம்
பேலியோ உணவு முறையில் மாவுச்சத்தை குறைத்து உண்பதே அடிப்படை 300 கிராம் மாவுச்சத்து எனும் ஆபத்தான அளவுகளில் சாப்பிட்டவர்களை 50 கிராம் என்ற அளவில்
- காய்கறிகள்
- கடலை மற்றும் நட்ஸ்
- பால்
- முட்டை
- மாமிசம்
போன்றவற்றை வைத்து உருவாக்கும் உணவு அட்டவணையில்
நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவுகள் நன்றாக கட்டுக்குள் வரும்.
தானியங்கள் / சிறுதானியங்கள் இவற்றை நீரிழிவு நோயாளிகள் உட்கொண்டாலும் ரத்த சர்க்கரை அளவுகள் கட்டுக்குள் வராமல் தொடர்ந்து மாத்திரைகளின் அளவுகளையும் கூட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இவற்றை அளவு குறைத்து சாப்பிட்டாலும் பசி கோரப்பசியாக மாறி அடிக்கடி சீனி கலந்து டீ காபி மற்றும் ஸ்நாக்ஸ் உட்கொள்ள வேண்டி வந்து நீரிழிவை அதிகமாக்குகிறது
நலமான வாழ்வுக்கு முக்கியமான ஊட்டச்சத்தான புரதச்சத்தை சரியான விகிதத்தில் முட்டை மாமிசம் மூலம் பெறச்செய்வது இந்த உணவு முறையின் நோக்கமாகும்.
இன்னும் நாம் அளவின்றி அச்சம் கொள்ளும் தேங்காய் எண்ணெய் / தேங்காய் / வெண்ணெய் / நெய் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
புரதச்சத்தையும் கொழுப்புச் சத்தையும் தேவையான அளவு உட்கொள்ளுவதால் பசி அடங்குகிறது.
இதனால் அடிக்கடி க்ரேவிங் ஏற்பட்டு சீட்டிங் செய்யவேண்டிய தேவை இருப்பதில்லை.
ரீபைண்டு எண்ணெய் எண்ணெயில் பொரித்த உணவுகள் சீனி / நாட்டு சர்க்கரை / தேன் / இனிப்பான பழங்கள் ஆகிய அனைத்தையும் ரத்த சர்க்கரையை வெகுவாக ஏற்றுகின்றன என்பதாலும் இவற்றுக்கு இவ்வுணவுமுறையில் தடை உண்டு.
நிற்க
இந்த உணவு முறையோடு சேர்த்து தினமும் உடற்பயிற்சி கூடவே முறையான தூக்கம் உட்கொள்ளப்பட வேண்டிய நீரின் அளவு இத்தோடு சேர்த்து உட்கொள்ளப்படவேண்டிய ஏற்கனவே இருக்கும் பிரச்சனைகளுக்கான மாத்திரைகள் நிறுத்தாமல் உட்கொள்ளப்பட வேண்டும்.
ஒருவருக்கு மருத்துவம் சார்ந்த பிரச்சனைகள் இருப்பின் மருத்துவரிடம் பரிந்துரை பெற்று அதற்குத் தேவையான சிகிச்சை மற்றும் உணவு முறை மாற்றத்தை செய்வது தான் முறை
இன்று பலரும் அதை செய்வதில்லை
கூடவே மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்த பரிசோதனைகளை மறு ஆய்வு செய்து வர வேண்டும் என்பதையும் கடைபிடிப்பதில்லை
மேலும் உணவு முறை மாற்றி விட்டதாலேயே தங்களுக்கு பல வருடங்களாக இருந்து வரும் பிரச்சனைகள் உடனே மறைந்து விடவேண்டும் என்று எண்ணி மாத்திரைகளை தன்னிச்சையாக நிறுத்துகின்றனர்
இன்னும் கட்டுக்கடங்காத நீரிழிவு / இதய நோய் / சிறுநீரக பிரச்சனை உள்ள பலர் மருத்துவர் பரிந்துரையின்றி உணவு முறையை கடைபிடிப்பது அதையும் முறையாக கடைப்பிடிக்காமல் இங்கொரு கால் அங்கொரு கால் என்று இருந்து கொண்டு மாத்திரை மருந்துகளை நிறுத்தி விடவும் செய்கின்றனர்
இவையனைத்தும் தவறான வழிமுறைகள்
பேலியோ எனும் குறை மாவு உணவு முறை வாழ்வியல் நீரிழிவை கட்டுப்படுத்த மிகச்சிறந்த கருவியாகும்.
எனவே இதை சரியாக உபயோகப்படுத்தி ஒருவர் நீரிழிவு வராமலும் நீரிழிவு வந்தவர் அதை கட்டுப்படுத்தவும் முடியும்
பேலியோவால் டயாபடிஸ் கட்டுப்படுமே அன்றி டயாபடிஸ் ஏற்படாது என்பதைக் கூறி இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.
நன்றி,